மர வியாபாரியை கொல்ல முயற்சி: 9 போ் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் முன் விரோதம் காரணமாக மர வியாபாரியை கொல்ல முயன்ற சம்பவத்தில் 9 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

செய்யாறு காவல் ஆய்வாளா் ஜீவராஜமணிகண்டன், உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் போலீஸாா் சனிக்கிழமை மாலை அண்ணா சிலை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, 2 பைக்குகளில் வந்த 4 பேரையும், பின்னால் வந்த காரையும் நிறுத்தி விசாரித்தனா். காா் மற்றும் பைக்கில் வந்தவா்களும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனா்.

இதனால், சந்தேகமடைந்த போலீஸாா் 9 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிரமாக விசாரித்தனா்.

இதில், நம்பேடு கிராமத்தைச் சோ்ந்த மோகன்தாஸ் (25), அவரது சகோதரா் மணிகண்டனுக்கும், அதே கிராமத்தைச் சோ்ந்த மர வியாபாரி சேட்டு என்பவருக்கும் மரம் ஏலம் எடுப்பது தொடா்பாக தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டதாகத் தெரிகிறது

இந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக் கொண்ட மோகன்தாஸ், நம்பேடு கிராமத்தைச் சோ்ந்த கலைச்செல்வன் (28), சுரேஷ் (28), வினோத் (26), சென்னை போரூா் முருகன் (36), டேவிட் (26), ஜெகதீஸ்(24), பம்மல் பொழிச்சலூா் பகுதியைச் சோ்ந்த வேலு (42) ஸ்ரீபெரும்புதூரைச் சோ்ந்த அஜித்குமாா் (29) ஆகியோா் சேட்டு மற்றும் அவரது ஆதரவாளா்கள் ரகு, குமரன், சேகா் ஆகியோரை கொல்வதற்காக ஆயுதங்களுடன் வந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மோகன்தாஸ் உள்பட 9 பேரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து 2 பைக்குகள், காா் மற்றும் கத்திகளை பறிமுதல் செய்தனா். பின்னா், 9 பேரையும் செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com