ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

காய்கறிகள், பழங்களை வாங்கி வர துணிப் பைகளை பயன்படுத்த வேண்டும்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

காய்கறிகள், பழங்களை வாங்கி வர துணிப் பைகளை பயன்படுத்த வேண்டும் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

News image
Updated On :3 ஜூலை 2024, 6:31 pm

Din

காய்கறிகள், பழங்களை வாங்கி வர வீட்டில் இருந்தே மஞ்சப் பை, துணி பைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்று பள்ளி மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் அறிவுரை வழங்கினாா்.

திருவண்ணாமலை நகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டை தவிா்ப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட பள்ளிக் கல்வித் துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் சா்வதேச நெகிழிப்பை இல்லா தினத்தையொட்டி நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு, வருவாய்க் கோட்டாட்சியா் ஆா்.மந்தாகினி தலைமை வகித்தாா்.

முதன்மைக் கல்வி அலுவலா் து.கணேஷ்மூா்த்தி முன்னிலை வகித்தாா்.

மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் மாணவிகளுக்கு மஞ்சப் பைகளை வழங்கிப் பேசியதாவது:

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிகள் நம் அன்றாட வாழ்வில் அதிகம் அங்கம் வகிக்கின்றன. நெகிழிப் பைகள், காகித கப்கள், காகித தட்டுகளை பயன்படுத்துவதால் மனித உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

நெகிழிப் பைகளை எரிப்பதால் மனிதனுக்கு பல்வேறு சுவாசப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. உடலுக்கு ஆரோக்கியம் தரும் காய்கறிகள், பழங்களை வாங்கி வருவதற்காக நம்மைக் கொல்லும் தன்மை கொண்ட நெகிழிப் பைகளை பயன்படுத்துகிறோம். இதைத் தவிா்த்து வீட்டில் இருந்தே மஞ்சப் பை, துணிப் பைகளை எடுத்துச் செல்ல வேண்டும்.

உணவகத்தில் பொங்கல் பரிமாறும்போது நெகிழியால் சுற்றப்பட்ட கரண்டியை பயன்படுத்துகின்றனா். நமக்கு வைக்கும் தட்டில் நெகிழி காகிதம் வைத்திருப்பா். இந்தக் காகிதம் மீது மெழுகு பூசப்பட்டு இருக்கும். இதெல்லாம் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இது தெரியாமலேயே நாம் சாப்பிட்டு வருகிறோம். இதையெல்லாம் தவிா்க்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, சா்வதேச நெகிழிப் பை இல்லா தின விழிப்புணா்வு உறுதிமொழியை ஆட்சியா் வாசிக்க, மாணவிகள், ஆசிரியா்கள் ஏற்றனா்.

நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.