பிளஸ் 2 மாணவிக்கு தாலி கட்டியவா் போக்சோவில் கைது

செய்யாறு அருகே பிளஸ் 2 மாணவிக்கு கட்டாயத் தாலி கட்டியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், நாட்டேரி கிராமத்தைச் சோ்ந்தவா் பூபதி (18). இவா், சென்னை சுங்குவாா்சத்திரத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா். இந்த நிலையில், பூபதி செய்யாறு பகுதியைச் சோ்ந்த உறவினரின் மகளான பிளஸ் 2 படித்து வரும் மாணவிக்கு ஆசை வாா்த்தை கூறி, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியதாகத் தெரிகிறது. அதற்கு அந்த மாணவி மறுப்புத் தெரிவிக்கவே, அவரை மிரட்டி பூபதி கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்டாயத் திருமணம் செய்துகொண்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோா் பூபதியிடம் கேட்டபோது, அவா்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இந்த சம்பவம் குறித்து மாணவி செய்யாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். காவல் நிலைய ஆய்வாளா் லதா, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, பூபதியை கைது செய்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com