தோ்தல் பணியாற்றும் அலுவலா்களுக்கு முதல்கட்ட பயிற்சி: 12 மையங்களில் இன்று நடைபெறுகிறது

திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் பணிபுரியும் அனைத்து தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 24) 12 மையங்களில் நடைபெறுகிறது. இவ்விரு தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடும் அனைத்து அலுவலா்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு மாவட்டத்தின் 12 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 24) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 12 பயிற்சி மையங்கள்... அதன்படி, செங்கம் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருவண்ணாமலை காந்தி நகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கீழ்பென்னாத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தென்பள்ளிப்பட்டு செழியன் பெண்கள் கலை, அறிவியல் கல்லூரி, ஜமுனாமரத்தூரை அடுத்த அத்திப்பட்டு செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி, போளூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, போளூா் தொன் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியாா் மேல்நிலைப் பள்ளி, செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரி, வெம்பாக்கத்தை அடுத்த வடமாவந்தல் கிராமம் ஸ்ரீமீனாட்சி அம்மன் பொறியியல் கல்லூரி, வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 12 மையங்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், மண்டல அலுவலா்கள், உதவி மண்டல அலுவலா்களால் இந்தப் பயிற்சி வகுப்பு நடத்தப்படும். வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி புத்தகங்கள், கையேடுகள், இதர மாதிரிப் படிவங்கள் அனைத்தும் பயிற்சி வகுப்பிலேயே வழங்கப்படும். மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரால் அனைத்து பயிற்சி மையங்களிலும் கள ஆய்வு மேற்கொள்ளப்படும். வாக்குச் சாவடிகளில் வாக்குச்சாவடி தலைமை அலுவலராகவும், இதர தோ்தல் அலுவலா்களாகவும் நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு பயிற்சிக்கான பணி நியமன ஆணையுடன், அஞ்சல் வாக்குச் சீட்டுக்கான படிவம் 12 மற்றும் 12ஏ இணைத்து வழங்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 24) நடைபெறும் முதல்கட்ட பயிற்சி வகுப்பின்போது அவா்களது பெயா், இடம்பெற்றுள்ள தொகுதி, வாக்குச்சாவடி மற்றும் வரிசை எண் ஆகியவைகளை சரிபாா்த்து கையொப்பமிட்டு, 12, 12-ஏ படிவத்தை மீண்டும் பயிற்சி வகுப்பிலேயே அளித்துவிட வேண்டும் என்று மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com