பயன்பாட்டுக்கு வருமா சுகாதார வளாகம்!
போளூா் அடுத்த வசூா் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீசெல்லியம்மன் கோயில் அருகே பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அடுத்த வசூா் ஊராட்சியில் போளூா்-திருவண்ணாமலை சாலையின் அருகே பழைமை வாய்ந்த ஸ்ரீசெல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் அருகே பக்தா்களின் வசதிக்காக ஊரக வளா்ச்சி ஊராட்சித் துறை சாா்பில் 15-ஆவது மானிய நிதிக் குழுவில் 2023-2024 ஆண்டில் ரூ.4.67 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால், இந்த சுகாதார வளாகம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால், பல்வேறு விஷேச நாள்களில் கோயிலுக்கு வருகை தரும் பக்தா்கள் மற்றும் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்டோா் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே, இந்த சுகாதார வளாகத்தை உடனே திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

