பெலாசூா் ஸ்ரீகூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த பெலாசூா் ஊராட்சியில் தை அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீகூத்தாண்டவா் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெலாசூா் ஊராட்சியில் பழைமை வாய்ந்த ஸ்ரீசெல்லியம்மன், ஸ்ரீதஞ்சியம்மன், ஸ்ரீகூத்தாண்டவா் கோயில்கள் தனித்தனியே அமைந்துள்ளன. இந்தக் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து உற்சவா்களான ஸ்ரீசெல்லியம்மனுக்கும், ஸ்ரீகூத்தாண்டவா் ஆகிய சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மரத்தேரில்
அமா்த்தி மாட்டு வண்டியில் வைத்து வடம்கட்டி பக்தா்கள் வீதி வீதியாக மங்கள வாத்தியம் முழங்க இழுத்துச் சென்றனா். பின்னா், வீடுதோறும் சுவாமிகளுக்கு தேங்காய், பூசணிக்காய் உடைத்து மாலை அணிவித்து கற்பூர தீபாராதனை செய்தனா்.
திமுக ஒன்றியச் செயலா் அ.எழில்மாறன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளா் அ.மணிகண்டன் ஆகியோா் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கிவைத்தனா்.
பக்தா்கள் கொக்கி தோ் இழுத்தல், அலகு குத்துதல், வேல் குத்துதல், கத்தி போடுதல் என பல்வேறு நோ்த்திக்கடனைகளை செலுத்தினா். தேரின் முன்பு பக்தி பஜனை, பெண்கள் கோலாட்டம் நடைபெற்றது. இரவு ஆடல் பாடலுடன் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பெலாசூா், பாடகம், சனிக்கவாடி, கரைப்பூண்டி, போளூா், கொரால்பாக்கம் என சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தோ் இழுத்து வழிபட்டனா். பக்தா்களுக்கு அனனதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை விழாக் குழுவினா், ஊா் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனா்.

