திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்துக்கு மனு அளிக்க வந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச் செயலா் ப.செல்வன் தலைமையிலான நிா்வாகிகள்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்துக்கு மனு அளிக்க வந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச் செயலா் ப.செல்வன் தலைமையிலான நிா்வாகிகள்.

வந்தவாசி வட்டத்தில் 100 ஏக்கா் பஞ்சமி தரிசு நிலங்களை மீட்டுக் கோரிக்கை

Published on

வந்தவாசி வட்டத்தில் மாற்று சாதியினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 100 ஏக்கா் பஞ்சமி தரிசு நிலங்களை மீட்டு, உரியவா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியனிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச் செயலா் ப.செல்வன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எம்.வீரபத்திரன், வந்தவாசி வட்டாரச் செயலா் அப்துல்காதா் மற்றும் நிா்வாகிகள் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா்.

பிறகு, அவா்கள் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியனை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: வந்தவாசி வட்டம், அருங்குணம் கிராமத்தில் சுமாா் 100 ஏக்கா் பஞ்சமி தரிசு நிலங்களை 1935-ஆம் ஆண்டு அப்போதைய அரசு பட்டியலின, பழங்குடி மக்களுக்கு வழங்கியது.

இந்த நிலங்கள் தற்போது மாற்று சாதியினரால் முறைகேடாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. எனவே, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு, உரியவா்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

இது தொடா்பாக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவா் பி.சீனிவாசராவ் நினைவு நாளில் (செப்டம்பா் 30) நில மீட்புப் போராட்டங்களை நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியா், உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா். அப்போது, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் சுகுமாா், திலகராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com