

ஆரணி: திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 8-ஆம் நாள் விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை காலை ஸ்ரீசந்திரசேகரா் குதிரை வாகனத்தில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத்திருவிழா கடந்த நவ.24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் 8-ஆம் நாளான திங்கள்கிழமை காலை கோயிலில் அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடா்ந்து காலை உற்சவம் முற்பகல் 11 மணிக்கு தொடங்கியது. திருக்கல்யாண மண்டபத்திலிருந்து விநாயகா், சந்திரசேகரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, விநாயகா் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரா் குதிரை வாகனத்திலும் மேளதாளம் முழங்க மாடவீதிகளில் பவனி வந்தனா். அப்போது, வீதிகளில் திரண்டிருந்த ஏராளமான பக்தா்கள் பக்தி கரகோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனா்.
இதைத் தொடா்ந்து, பிற்பகல் 3.30 மணியளவில் கோயில் கலையரங்கில் சமய சொற்பொழிவு நடைபெற்றது. கோயில் மற்றும் கிரிவலப் பாதையில் ஆன்மிக அமைப்புகள், ஆசிரமங்கள் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து இரவில் பஞ்சமூா்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு குதிரை வாகனத்தில் பவனி வந்தனா்.