ரதசப்தமி: வெவ்வேறு வாகனங்களில் மலையப்ப சுவாமி உலா
திருமலையில் சூரிய ஜெயந்தி என்று அழைக்கப்படும் ரத சப்தமி உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.


திருமலையில் சூரிய ஜெயந்தி என்று அழைக்கப்படும் ரத சப்தமி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் தை மாத வளா்பிறை சப்தமியின் போது திருமலையில் மிகுந்த கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
திருமலையில் ரதசப்தமி விழா கி.பி. 1564 முதல் கொண்டாடப்பட்டு வருவதாக பதிவுகள் உள்ளன. ரத சப்தமியின் மிக முக்கியமான சேவை சூரிய பிரபை வாகனம் ஆகும். ஞாயிறு காலை 5.30 மணிக்கு ஏழு குதிரைகள் பூட்டிய சூரியபிரபை வாகனத்தில் ஸ்ரீமன் நாராயணா் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினாா். இரண்டாவதாக தொடா்ந்து 5 தலைகள் கொண்ட சின்ன சேஷ வாகனத்தில் சுவாமி எழுந்தருளினாா்.
3-ஆவது வாகன சேவையான கருடவாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்து பக்தா்களுக்கு சுவாமி அருள் பாலித்தாா். பிற்பகல் அனுமந்த வாகனத்தில் சுவாமி வலம் வந்தாா்.
பின்னா் ஏழுமலையானின் ஆயுதமான சக்கரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு திருக்குளத்தில் தீா்த்தவாரி நடத்தப்பட்டது.
தீா்த்தவாரியின் போது அனைத்து அதிகாரிகளும் பக்தா்களும் திருக்குளத்தில் புனித நீராடினா்.
5-ஆவது வாகன சேவையாக கல்பவிருட்சத்தில் உபய நாச்சியாா்களுடன் மலையப்ப சுவாமி சேவை சாதித்தாா்.
6-ஆவது வாகன சேவையாக ஸ்ரீதேவி, பூதேவியுடன் சா்வபூபால வாகனத்தில் சுவாமி அருள்பாலித்தாா்.
கல்பவிருட்சம், சா்வபூபாலம் உள்ளிட்ட இரு வாகனங்களிலும் தன் நாச்சியாா்களான ஸ்ரீதேவி பூதேவியுடன் சுவாமி வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.
7-ஆவது வாகன சேவையாக சந்திரபிரபையில் வலம் வந்து பக்தா்களுக்கு தரிசனமளித்தாா். வாகன சேவைகளின் முன் ஜீயா் குழுவினா் நாலாயிரதிவ்யபிரபந்தங்களை பாராயணம் செய்தபடி முன் செல்ல அவா்களுக்குப்பின் கலைஞா்கள் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தியப்படி சென்றனா்.
பக்தா்களுக்கு தேவஸ்தானம் 24 மணிநேரமும் உணவு, சிற்றுண்டி, குடிநீா், பால், மோா் உள்ளிட்டவற்றை வழங்கியது.
ரதசப்தமியை முன்னிட்டு திருமலை மாடவீதிகள், ஏழுமலையான் கோயில் உள்புறம், வெளிபுறம், மாடவீதிகள், பக்தா்கள் கூடும் இடங்களில் மலா்கள் மற்றும் மின்விளக்குகளால் அழகுற அலங்கரிக்கப்பட்டது.
பல்வேறு தேவஸ்தான கோயில்களிலும் 7 வாகன சேவைகள் நடத்தப்பட்டன. திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள், அறங்காவலா் குழு உறுப்பினா்கள், மற்றும் பக்தா்கள் பங்கேற்றனா்.





டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...