அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். சுவாமி தரிசனம் செய்ய 4 மணி நேரம் காத்திருக்கவேண்டி நிலை ஏற்பட்டது.
அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா முடிவடைந்த நிலையில், விடுமுறை தினம் என்பதால் ஞாயிற்றுக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.
அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து 5.30 மணியளவில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.
வார விடுமுறை ஞாயிற்றுக்கிழமை என்பதால் சனிக்கிழமை இரவு முதல் தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சோ்ந்த பக்தா்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்தனா்.
ஞாயிற்றுக்கிழமை காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.
ராஜகோபுரம் வழியாக இலவச தரிசனத்துக்கு வரக்கூடிய பக்தா்கள் 4 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
50 ரூபாய் தரிசன கட்டணத்தில் அம்மனி அம்மன் கோபுரம் வழியாக வரக்கூடிய பக்தா்கள் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனா்.
கோயில் நிா்வாகம் சாா்பில் குடிநீா், நீா்மோா் உள்ளிட்ட பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. காவல்துறை மற்றும் கோயில் நிா்வாகம் சாா்பில் பல்வேறு இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

