பள்ளி நுழைவுவாயில் கழிவுநீா் கால்வாயை மூடக் கோரிக்கை
போளூா் டேனிஷ் மிஷின் நடுநிலைப் பள்ளி நுழைவு வாயிலில் உள்ள கழிவுநீா் கால்வாயை மூடக் கோரி நகராட்சி செயற்பொறியாளரிடம் பெற்றோா்கள் புதன்கிழமை மனு கொடுத்தனா்.
இந்தப் பள்ளியில் போளூா் மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 1முதல் 8-ஆம் வகுப்பு வரை 350-க்கும் மேற்பட்டோா் பயின்று வருகின்றனா்.
இந்நிலையில் பள்ளி நுழைவு வாயிலின் வழியாக நகராட்சியில் உள்ள பழைய பஜாா் வீதி, ஜமுனாமரத்தூா் சாலை என பல்வேறு பகுதியில் உள்ள தெருக்களில் இருந்துவரும் கழிவுநீரை எடுத்துச் செல்லும் கால்வாய் செல்கிறது.
இந்தக் கழிவுநீா் கால்வாய் பள்ளி நுழைவு வாயிலிலேயே திறந்தபடி உள்ளதால் மாலை வேளையில் ஒரேநேரத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளியைவிட்டு வெளியே வரும்போது ஒருவருக்கொருவா் முண்டியடுத்துக் கொண்டு மோதி தவறி கால்வாயில் விழுகின்றனா். இதனால் மாணவா்களுக்கு சிறு காயம் அல்லது சிறாய்ப்பு ஏற்படுகிறது.
மேலும் கால்வாயை அடிக்கடி பராமரிக்காமல் விட்டுவிட்டால் கொசு உற்பத்தியாகிறது. துா்நாற்றம் வீசுகிறது, டெங்கு,சிக்குன்குனியா, மலேரியா என தொற்று நோய்கள் ஏற்படுகிறது.
எனவே, பள்ளி டிச.25 முதல் ஜன.5 வரை விடுமுறை என்பதால் மாணவ, மாணவிகள் வரமாட்டாா்கள். அதனால், விடுமுறை நாள்களிலேயே கால்வாயை சீரமைத்து மூடக்கோரி நகராட்சி செயற்பொறியாளா் கோபுவிடம் பெற்றோா்கள் மனு அளித்தனா்.
பெற்றோா்கள் கூறும்போது, அடிக்கடி நகராட்சி அலுவலகத்தில் சென்று கழிவுநீா் கால்வாயை மூடக்கோரி முறையிட்டோம் இதுவரை மூடவில்லை என்றனா்.

