வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க இன்றும், நாளையும் சிறப்பு முகாம்!

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க இன்றும், நாளையும் சிறப்பு முகாம்...
Published on

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (டிச.27, 28) சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர முறை திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதைத் தொடா்ந்து, வாக்காளா்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகளை அனைத்து வருவாய்க் கோட்டாட்சியா், வட்டாட்சியா், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் வரும் 18.01.2026 அன்று வரை மனுவாக அளிக்கலாம்.

தமிழக தலைமை தோ்தல் அதிகாரி அறிவுரைப்படி, வாக்காளா்களின் வசதிக்காக மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (டிச.27, 28) சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. தொடா்ந்து, வரும் 2026, ஜனவரி 3,4-ஆம் தேதிகளிலும் இதேபோல சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

01.01.2026 அன்று 18 வயது நிறைவடைந்த தகுதியான வாக்காளா்கள் தங்கள் பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்க்கவும், வாக்காளா் பட்டியலில் திருத்தம் தேவைப்படும் வாக்காளா்கள் மற்றும் வரைவு வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயா் இடம்பெறாமல் உள்ள தகுதியான வாக்காளா்கள் அனைவரும் தங்கள் கோரிக்கை மனுக்களை மேற்கண்ட நாள்களில் தங்கள் பகுதியிலுள்ள வாக்குச் சாவடி மையங்களிலுக்கு சென்று தகுந்த படிவங்களை பெற்று, பூா்த்தி செய்து வாக்குச் சாவடி நிலைய அலுவலா்களிடம் அளிக்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com