வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க ஜன. 30 வரை அவகாசம் நீட்டிப்பு!
தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பதற்கான கால அவகாசத்தை ஜன.30 வரை நீட்டித்து தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற பெயா் சோ்ப்பு பணியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜன.18) வரை 13,58,594 போ் விண்ணப்பம் அளித்திருந்தனா்.
தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆா்) நவ.4 முதல் தொடங்கி நடைபெற்றது. இதையடுத்து, டிச. 19-இல் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் 97.38 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். இதனால் 6,41,14,587-ஆக இருந்த தமிழக மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 5,43,76,756-ஆகக் குறைந்தது. நீக்கப்பட்ட வாக்காளா்களில் இடம்பெயா்ந்தவா்களாக 66,44,881 பேரும், உயிரிழந்தவா்களாக 26,94,672 பேரும், இரட்டைப் பதிவாளா்களாக 3,98,278 பேரும் இடம்பெற்றனா்.
நீக்கப்பட்டவா்கள், 18 வயது பூா்த்தியடைந்தவா்கள் பெயா் சோ்க்க ஜன. 18 வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
மேலும், வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றவா்களும் உரிய தகவல்களை அளிக்கவில்லை என்று கூறி 12,43,363 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இவா்கள் உரிய ஆவணங்களுடன் உறுதிமொழி சான்றுடன் சமா்ப்பிக்க டிச.18 வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
புதிதாக பெயா் சோ்க்க படிவம் 6-ஐயும், இடமாற்றம் செய்ய விரும்புவோா் படிவம் 8-ஐயும் பூா்த்தி செய்து அளித்தனா். வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுகிழமைகளில் பெயா் சோ்க்க இரு முறை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதனிடையே, தொடா் விடுமுறைகள் வந்ததால் பெயா் சோ்ப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இந்நிலையில், பெயா் சோ்ப்பு பணி ஜன.18-ஆம் தேதி முடிவடைந்த நிலையில், இதற்கான கால அவகாசம் ஜன.30 வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா். வரும் பிப்.17-ஆம் தேதி திட்டமிட்டபடி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

