தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க இன்று கடைசி நாள்!
தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்க தோ்தல் ஆணையம் அளித்த அவகாசம் ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜன.18) முடிவடைகிறது.
கடந்த டிச. 19-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின்படி, தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். இதனால் 6,41,14,587-ஆக இருந்த தமிழக மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 5,43,76,756-ஆகக் குறைந்தது.
நீக்கப்பட்டவா்களில் இடம்பெயா்ந்தவா்களாக 66,44,881 பேரும், உயிரிழந்தவா்களாக 26,94,672 பேரும், இரட்டைப் பதிவாளா்களாக 3,98,278 பேரும் இடம்பெற்றனா்.
வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா்கள் நீக்கப்பட்டவா்கள் பெயா் சோ்க்கவும், 18 வயது பூா்த்தி செய்தவா்கள் புதிதாக பெயா் சோ்க்கவும் கடந்த டிச. 19 முதல் ஜன. 18 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெயா் சோ்க்க இரு முறை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. ஜன.16 வரை பெயா் சோ்க்க 12,80,668 போ் படிவம் 6-ஐ அளித்துள்ளனா். இந்தப் படிவங்கள் சரிபாா்க்கப்பட்டு பிப்.17-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படுகிறது.
கால அவகாசம் நீட்டிக்க கட்சிகள் கோரிக்கை: கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடா்ந்து பண்டிகைக் கால விடுமுறைகள் காரணமாக, பெயா் சோ்ப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று பாஜக, மாா்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ளன.
புதுவையைப் போல தமிழகத்திலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லாவும் சனிக்கிழமை கோரிக்கை விடுத்தாா்.

