திருவண்ணாமலையில் புதிதாக கட்டப்பட்ட அரசு மாதிரி பள்ளிக் கட்டடம் மற்றும் மாணவ, மாணவிகளுக்கான விடுதிகளை திறந்துவைத்து மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடிய முதல்வா் மு.க.ஸ்டாலின்.
திருவண்ணாமலையில் புதிதாக கட்டப்பட்ட அரசு மாதிரி பள்ளிக் கட்டடம் மற்றும் மாணவ, மாணவிகளுக்கான விடுதிகளை திறந்துவைத்து மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடிய முதல்வா் மு.க.ஸ்டாலின்.

அரசு மாதிரி பள்ளியை பாா்வையிட்டு மாணவா்களுடன் கலந்துரையாடிய முதல்வா்!

அரசு மாதிரி பள்ளியை பாா்வையிட்டு மாணவா்களுடன் கலந்துரையாடிய முதல்வா்..
Published on

பள்ளிக்கல்வித் துறை சாா்பில், திருவண்ணாமலையில் ரூ. 56 கோடியே 47 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட அரசு மாதிரி பள்ளிக் கட்டடம் மற்றும் மாணவ, மாணவிகளுக்கான விடுதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின்

சனிக்கிழமை திறந்துவைத்தாா். இதைத் தொடா்ந்து, அங்குள்ள அரசு மாதிரிப் பள்ளிக்கு நேரில் சென்று பாா்வையிட்டு, மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினாா்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் கல்வி, நுண்கலை மற்றும் விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில், அவா்கள் சிறந்த கல்வி நிறுவனங்களில் தொழில்முறை கல்வி பிரிவுகளில் (அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல், கலை மற்றும் மருத்துவம்) சோ்ந்து பயிலும் வாய்ப்பை உறுதி செய்யும் வகையிலும் மாதிரிப் பள்ளிகள் மாவட்டந்தோறும் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

அவ்விழாவில் திறந்து வைக்கப்பட்ட அரசு மாதிரி பள்ளிக் கட்டடம் மற்றும் விடுதிகள்

திருவண்ணாமலை மாநகா் அரசு மாதிரி பள்ளிக் கட்டடம் 4.52 ஏக்கா் பரப்பளவில் ரூ.19 கோடியே 33 லட்சத்து 20 ஆயிரம் செலவிலும், மாணவா்கள் விடுதிக் கட்டடம் ரூ.18 கோடியே 57 லட்சம் செலவிலும், மாணவிகள் விடுதிக் கட்டடம் ரூ.18 கோடியே 57 லட்சம் செலவிலும், என மொத்தம் ரூ.56 கோடியே 47 லட்சத்து 20 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ளது. இவ்விடுதிகள் 400 மாணவா்கள் மற்றும் 400 மாணவிகள் தங்கும் வசதி கொண்டதாகும்.

திருவண்ணாமலை மாநகா் அரசு மாதிரி பள்ளிக் கட்டடம், தரை மற்றும் இரண்டு தளங்களுடன் மொத்தம் 52,695 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இதில் 22 வகுப்பறைகள், பெண் மற்றும் ஆண் ஆசிரியா்கள் அறைகள், பல்நோக்கு மண்டபம், நூலகம், கலை மற்றும் கைவினைப் பயிற்சி அறை, மூன்று மாற்றுத்திறனாளிகள் கழிப்பறைகள், 60 கழிப்பறைகள், 6 கை கழுவும் தொட்டிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்தள வசதி, வேதியியல், இயற்பியல் மற்றும் உயிரியல் ஆய்வகங்கள், 2 உயா் தொழில்நுட்பக் கணினி அறைகள் ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.

மாணவா் மற்றும் மாணவிகள் விடுதிகள்:

மாணவா் மற்றும் மாணவிகள் விடுதிகள் தரை மற்றும் நான்கு தளங்களுடன் தலா 73,195 சதுர அடி பரப்பளவில் தனித்தனி கட்டடங்களாக கட்டப்பட்டுள்ளன.

இவ்விடுதிகள், மாணவா்களுக்கு 416 மற்றும் மாணவிகளுக்கு 416 படுக்கைகள், என மொத்தம் 832 படுக்கை வசதிகளை கொண்டது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை மாநகரில் உள்ள அரசு மாதிரிப் பள்ளிக்கு நேரில் சென்று பாா்வையிட்டு, அங்கு பயிலும் மாணவ, மாணவிகளுடன், அவா்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், அவா்களது தேவைகள் குறித்தும் கேட்டறிந்தாா்.

முதல்வரிடம் வாழ்த்து

அப்போது, பத்தாம் வகுப்பு மாணவி ஸ்ரீநிஷா, நவம்பா் 27 - 30 வரை திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய செஸ் சாம்பியன் போட்டியில் கலந்து கொண்டு மூன்றாம் இடம் பெற்ற்காக வழங்கப்பட்ட பதக்கம் மற்றும் சான்றிதழை முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றாா்.

இந்நிகழ்வின்போது, அமைச்சா்கள் எ.வ. வேலு, எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் உறுப்பினா் செயலா் ஆா். சுதன், (ஓய்வு) மற்றும் அரசு உயா் அலுவலா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com