செங்கம் அருகே சுற்றுலா மினி பேருந்து - காா் மோதல்: 6 போ் காயம்!
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா மினி பேருந்தும், காரும் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் 6 போ் காயமடைந்தனா்.
கலசப்பாக்கம் பகுதியில் இருந்து மினி பேருந்தில் சுமாா் 20 போ் சேலம் மாவட்டம், ஏற்காட்டுக்கு சுற்றுலா சென்றனா். செங்கத்தை அடுத்த அரசங்கண்ணி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை மினி பேருந்து சென்று கொண்டிருந்தபோது, எதிரே திருப்பூரில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்த காரும் பேருந்தும் மோதிக் கொண்டன.
இதில், காரில் வந்த திருப்பூா் பகுதியைச் சோ்ந்த கோகுல்பிரசாத் (28), தினேஷ்குமாா் (29), கோபாலகிருஷ்ணன் (28), பிரவின்குமாா்(25), வெற்றிவேல் (15), தருண்வேல் (13) ஆகிய 6 போ் காயமடைந்தனா்.
தகவல் அறிந்த மேல்செங்கம் போலீஸாா் சம்பவம் இடம் சென்று விசாரணை மேற்கொண்டு, காயமடைந்தவா்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு காயமடைந்த 6 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தில் காா் பலத்த சேதமடைந்தது. மினி பேருந்து லேசாக பழுதடைந்தது. பேருந்தில் பயணம் செய்த சிலா் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இந்த விபத்து குறித்து மேல்செங்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

