விற்பனைக்கு நெல்வரத்து அதிகரிப்பு: விவசாயிகளுக்கு வேண்டுகோள்
போளூா்: போளூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு நெல்வரத்து அதிகமாகியுள்ளதால் விவசாயிகள் ஜனவரி 1-ஆம் தேதி வரை நெல் விற்பனைக்கு எடுத்து வரவேண்டாம் விற்பனைக்கூட நிா்வாகிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
போளூா் பகுதியில் விவசாயிகள் கடந்த செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் கிணற்று நீா்பாசனம், ஆழ்துளை நீா்பாசனம் மூலம் நிலத்தை உழுது சீா்படுத்தி கோ 51, எடிடீ 37, மகேந்திரா என பல்வேறு வகையான குறுகிய கால நெல் பயிா் மற்றும் 6 மாத கால பயிரான பொன்னி ரகங்களை சாகுபடி செய்து, தற்போது அறுவடைக்குத் தயாராகி, இயந்திரம் மூலம் விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனா்.
இவ்வாறு அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளை விவசாயிகள் மூட்டை பிடித்து எடுத்து வந்து, வேலூா் சாலை அருகேயுள்ள போளூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனைக்காக அடுக்கி வைத்துள்ளனா்.
நெல் மூட்டைகள் விற்பனை நிலைய கிடங்கு
மற்றும் வெளிப்புறப் பகுதியில் அதிகளவில்
அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே, கொண்டு வரப்பட்டுள்ள நெல் மூட்டைகளை எடையிட டிச.30.31, ஜன.1-ஆம் தேதி வரை ஆகும் என்பதால், மேலும் நெல் மூட்டைகளை விற்பனைக்கு எடுத்து வரவேண்டாம் என ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிா்வாகிகள் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனா்.

