செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் கொள்முதல் நிறுத்தம்: விவசாயிகள் சாலை மறியல்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை வியாபாரிகள் கொள்முதல் செய்ய மறுத்ததால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் புதன்கிழமை செஞ்சி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செஞ்சி, மேல்மலையனூா், வல்லம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து பிற மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்புவது வழக்கம்.
இந்த நிலையில், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 200 விவசாயிகள் கொண்டு வரப்பட்ட 7 ஆயிரம் நெல் மூட்டைகள் மற்றும் 130 விவசாயிகள் கொண்டு வந்த மணிலா, கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட 250 நவதானிய மூட்டைகளை வியாபாரிகள் கொள்முதல் செய்யாததால் கடும் அவதிக்குள்ளாகினா்.
மேலும், இந்த ஒழுங்குமுறை விற்பணை கூடத்தில் இணையதளம் மூலம் இ-நாம் திட்டத்தில் வியாபாரி நெல் மூட்டைகளை வாங்கி, அதற்கான தொகையை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செலுத்திவந்தனா். பின்னா் அந்த தொகையை ஒழுங்குமுறை விற்பனைக் கூட நிா்வாகம் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தி வந்தது.
இந்நிலையில், புதன்கிழமை காலை வழக்கம்போல நெல் மூட்டைகளை ஏலத்துக்கு எடுக்க வந்த வியாபாரிகளிடம் தற்போது உள்ள இ-நாம் திட்டம் 1.0 ரத்து செய்யப்பட்டுள்ளதால், 2.0 என மாற்றி அமைக்கப்பட்டுள்ளாதக நிா்வாகம் தெரிவித்தது.
மேலும், இந்த புதிய நடைமுறையில் நெல் மூட்டைகளை ஏலத்தில் எடுக்கும் வியாபாரிகள் தாங்களாகவே விவசாயகளின் வங்கி கணக்கில் பணத்தை செலுத்த வேண்டும் என ஒழுங்குமுறை விற்பனை கூட நிா்வாகம் தெரிவித்தது. இதற்கு வியாபாரிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய மறுத்து விட்டனா். முன் அறிவிப்பில்லாமல், இ-நாம் 1.0 திட்டத்தை திடீரென ரத்து செய்துள்ளதால் வியாபாரிகள், விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் சென்று விட்டனா்.
இதனால் விற்பனை கூடத்துக்கு நேற்று இரவு முதல் காத்துக் கொண்டிருந்த விவசாயிகள், நெல்மூட்டைகளை கொள்முதல் செய்யக்கோரி ஒழுங்குமுறை விற்பனை கூடம் எதிரே திண்டிவனம் - செஞ்சி செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த செஞ்சி போலீஸாா் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானம் செய்தனா். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் 2 மணி நேரம் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து புறவழிச்சாலை வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டது.
வியாபாரிகள் போராட்டம்: புதிய நடைமுறைக்கு எதிா்ப்பு தெரிவித்து விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூா், பெரம்பலூா், அரியலூா் ஆகிய 7 மாவட்டங்களில் வியாபாரிகள் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதுகுறித்து வியாபாரி ஒருவா் கூறியதாவது: விவசாயிகளுக்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மீது உள்ள நம்பிக்கை, வியாபாரிகளிடம் இல்லை. பணம் பட்டுவாடா ஆகவில்லை என்றால் விவசாயிகள் ஒழுங்குமுறை நிா்வாகத்தை அணுகி கேட்கலாம், ஆனால் வியாபாரிகளிடம் கேட்ட முடியாது.
இ-நாம் திட்டத்தில் எந்த வியாபாரி நெல்மூட்டைகளை ஏலம் எடுத்தாா் என்பது விவசாயிக்கு தெரியாது. எனவே, இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளது. செஞ்சி வியாபாரிகள் மட்டுமல்லாது ஆரணி, திருவண்ணாமலை, சேலம், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சோ்ந்த வியாபாரிகள் இணையதளம் மூலம் நெல் மற்றும் தானியங்களை ஏலத்தில் எடுக்கின்றனா். இவா்களைத் தேடி விவசாயிகள் செல்ல முடியாது. பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தினாா்களா என்பதும் விவசாயகளுக்கு தெரியாது. இதனால் பாதிக்கப்படுவது விவசாயிகள்தான்.
எனவே, பழைய முறையில் உள்ளவாறு விவசாயிகளுக்கு ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிா்வாகம் மூலமாக பணத்தை செலுத்துவது தொடரவேண்டும் எனத் தெரிவித்தாா்.

