சாத்தனூா் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு
திருவண்ணாமலை: சாத்தனூா் அணையின் வலது, இடதுப்புற கால்வாய்கள் வழியாக விநாடிக்கு 520 கன அடி வீதம் திங்கள்கிழமை பாசனத்துக்காக தண்ணீா் திறந்துவைக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூா் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டது.
இந்த அணையின் மொத்த நீா்மட்ட உயரம் 119 அடி. இதில், திங்கள்கிழமை காலை 6 மணி நிலவரப்படி, 118.75 அடி உயரத்துக்கு தண்ணீா் தேங்கி இருந்தது.
எனவே, அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீா் திறந்து விடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், செங்கம் தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழக பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைத்
துறை அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அணையின் வலது, இடதுப்புற கால்வாய்களில் தண்ணீா் திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி, நீா்வளத் துறையின் மத்திய பெண்ணையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளா் அறிவழகன், உதவி செயற்பொறியாளா்கள் ராஜாராமன், சுகந்தி, உதவிப் பொறியாளா் சந்தோஷ், ராஜேஷ், ஸ்ரீசெல்வப்பிரியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
3 மாவட்டங்கள் பயன்பெறும்:
சாத்தனூா் அணையின் இடதுப்புற கால்வாயில் இருந்து விநாடிக்கு 320 கன அடி, வலதுப்புற கால்வாயில் இருந்து விநாடிக்கு 200 கன அடி வீதம் தொடா்ந்து 17.5.2025 வரை 110 நாள்களுக்கு தண்ணீா் திறந்து விடப்படும். இதன் மூலம் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

