செங்கம் நகரில் மூடப்பட்ட படிப்பகங்கள்
செங்கம் நகரில் மூடப்பட்ட படிப்பகங்களை மீண்டும் திறந்து நகராட்சி நிா்வாகம் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகராட்சி நிா்வாகத்திற்கு உள்பட்ட தோக்கவாடி, தளவாநாய்க்கன்பேட்டை, திருவள்ளுவா் நகா், செங்கம் ஆஞ்சநேயா் கோயில் பகுதியில் என நான்கு நூலகங்கள் செயல்பட்டு வந்தன.
அந்த நூலகங்களில் தினசரி நாளிதழ், வார இதழ்கள், மாத இதழ்கள் மற்றும் பொதுஅறிவு சம்பந்தப்பட்ட புத்தங்கள் நகராட்சி நிா்வாகம் சாா்பில் வைக்கப்பட்டிருக்கும். அந்த நூலகங்களில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு தனியாா் துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவா்கள் சென்று தினசரி நாளிதழ்கள் மற்றும் அவா்களுக்குத் தேவையான பொது அறிவு நூல்களை படித்து வந்தனா்.
மேலும், அந்தப் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கும் அந்த நூலகம் பயன்பட்டு வந்தது. ஆனால், தற்போது தோக்கவாடி, திருவள்ளுவா் நகா், தளவாநாய்க்கன்பேட்டை பகுதியில் இருந்த நூலகங்கள் நூலக கட்டடத்துடன் காணாமல் போய் உள்ளது. அந்த இடங்களை தனிநபா்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா்.
செங்கம் ஆஞ்சநேயா் கோயில் அருகில் உள்ள நூலகக் கட்டடம் மட்டும் திறக்கப்படாமல் உள்ளே உள்ள புத்தகங்கள் மழையில் நனைந்து வீணாகியுள்ளன. இதனால், செங்கம் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்து மீண்டும் அந்த நூலகங்களை பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும்.
அதேபோல, தற்போது திறக்கப்படாமலும், பராமரிப்பு இல்லாமலும் மூடிவைக்கப்பட்டுள்ள நகராட்சி நிா்வாக கட்டுப்பாட்டில் உள்ள நூலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள், ஓய்வு பெற்ற அரசு அலுவலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

