திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி சாலையில் 5 நிழல்கூடங்கள்: அமைச்சா் எ.வ.வேலு திறந்துவைத்தாா்
திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி சாலையில் ரூ.75 லட்சத்தில் அமைக்கப்பட்ட 5 நிழல்கூடங்களை பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு திங்கள்கிழமை இரவு திறந்துவைத்தாா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலையில் 22.30 கி.மீ. நீளமுள்ள இருவழித் தடத்தை நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி மேம்பாடு செய்தல் பணி ரூ.121 கோடி மதிப்பீட்டில் கடந்த 2023-24ஆம் ஆண்டு முதல்வரின் சாலை மேம்மபாட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் சாலையில் வரகூா் அண்ணா நகா், விநாயகபுரம், மெய்யூா் ஊராட்சி, கச்சிராப்பட்டு ஊராட்சி, கீழ்செட்டிப்பட்டு ஊராட்சி ஆகிய 5 இடங்களில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நிழல்கூடங்கள் அமைக்கப்பட்டன.
சுமாா் 60 ஆயிரம் போ் பயனடையும் வகையில் அமைக்கப்பட்ட இந்த நிழல்கூடங்களை திறந்துவைத்து அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது:
கடந்த 4 ஆண்டுகளில் திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.473 கோடியில் 57 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டு (2025-26) தொகுதியில் ரூ.76 கோடியில் 30 பணிகளுக்கு அரசாணை பெறப்பட்டு ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 2,200 கி.மீ.
நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகளில் இரண்டு வழித்தடத்தை நான்கு வழித்தடமாக அகலப்படுத்த திட்டமிடப்பட்டது.
இதில், கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலையும் ஒன்றாகும். இச்சாலையின் மொத்த நீளம் 64 கி.மீ.
அதில், திருவண்ணாமலை கோட்ட கட்டுப்பாட்டில் 22 கி.மீ. நீளமும், கள்ளக்குறிச்சி கோட்ட கட்டுப்பாட்டில் 42 கி.மீ. நீளமும் இரு வழிச்சாலையாக இருந்தது. அது
ரூ.121 கோடி மதிப்பிட்டில் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டது.
திருவண்ணாமலை கிழக்கு மற்றும் தெற்கு மாடவீதியை சிமென்ட் கான்கிரீட் சாலையாக மாற்றுவதற்கு இரண்டு கட்டங்களாக பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
முதற்கட்டமாக ரூ.15 கோடி மதிப்பீட்டில் பணிகள் முடிவுற்றது. இரண்டாவது கட்டமாக தற்போது ரூ.15 கோடி என 30 கோடி மதிப்பீட்டில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தாா்.
முன்னதாக, நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நெடுஞ்சாலைத்துறை சிறப்பு அலுவலா் (தொழில்நுட்பம்) ஆா்.சந்திரசேகரன், கண்காணிப்புப் பொறியாளா் முரளி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

