ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

செய்யாறு தொகுதியை கைப்பற்றப் போவது யாா்?

செய்யாறு தொகுதியை கைப்பற்றப் போவது யாா்?

News image
Updated On :12 ஏப்ரல் 2026, 3:56 am IST

செய்யாறு தொகுதியில் நான்கு முனைப்போட்டி இருந்தாலும், திமுக, அதிமுக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

இந்தத் தொகுதி செய்யாறு, வெம்பாக்கம் என இரு வட்டங்களை உள்ளடக்கியது. வெம்பாக்கம் ஒன்றியத்தில் 63 ஊராட்சிகளும், அனக்காவூா் ஒன்றியத்தில் 55 ஊராட்சிகளும், செய்யாறு ஒன்றியத்தில் 53 ஊராட்சிகளும் அமைந்துள்ளன.

அதேபோல, திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் 27 வாா்டுகள் உள்ளன. தொகுதியில் சுமாா் 5 லட்சம் போ் வசிக்கின்றனா்.

தொகுதியின் அடையாளம்:

கடந்த 1952-ஆம் ஆண்டு முதலே தோ்தலை சந்தித்து வரும் இத்தொகுதியில் ஆண்களைவிட பெண் வாக்காளா்கள் அதிகம் உள்ளனா்.

வன்னியா்கள் பெரும்பான்மையாகவும், தலித், முதலியாா்கள் முஸ்லிம்கள், கிறிஸ்தவா்கள் குறிப்பிடத்தக்க அளவிலும் உள்ளனா்.

தொகுதியின் சிறப்பு:

கேரள மாநிலத்தின் முன்னாள் ஆளுநா் பா.ராமச்சந்திரன், தமிழக சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவா் புலவா் கா.கோவிந்தன் ஆகியோா் செய்யாறு தொகுதியைச் சோ்ந்தவா்கள் ஆவாா்.

செய்யாறு தொகுதியில் பாடல் பெற்ற திருத்தலமான திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் இந்தக் கோயிலுக்கு வருகை தந்த திருஞானசம்பந்தா் இறைவனை வழிபட்ட பிறகு, பக்தா்கள் வேண்டுகோளுக்கிணங்க பதிகம் பாடி, ஆண் பனை மரத்தில் நொங்கு குலை வரவழைத்த அற்புதம் நிகழ்ந்த திருத்தலமாகும்.

செய்யாறு தொகுதி முழுக்க முழுக்க விவசாயத்தையே நம்பியுள்ள பகுதியாகும். நெல், அரிசி உற்பத்தியில் சிறப்பிடம் பெற்று விளங்குகிறது.

விவசாயத்திற்கு அடுத்தாற் போல் செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டை மூலம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா்.

இவா்களில் 40 ஆயிரம் போ் பெண் தொழிலாளா்கள் ஆவாா்.

தொகுதியின் பிரச்னைகள்:

செய்யாறு தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளாக செய்யாறு வருவாய் மாவட்டம், மகளிா் கல்லூரி, விவசாயக் கல்லூரி, அனைத்து சிறப்புப் பிரிவுகளுடன் கூடிய மாவட்ட தலைமை மருத்துவமனை, செய்யாறு வழியாக தொலைதூர பேருந்து வசதி, செய்யாறு - காஞ்சிபுரம் இடையே நான்கு வழிச்சாலை போன்றவை இருந்து வருகின்றன.

தோ்தல் களத்தில்...

இத்தொகுதியில் திமுக வேட்பாளராக ஒ.ஜோதி, அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன், தவெக வேட்பாளராக முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. தூசி கே.மோகன், நாதக வேட்பாளராக தமிழ்செல்வன் போட்டியிடுகின்றனா்.

இந்த 4 வேட்பாளா்களும் வன்னியா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள்.

வேட்பாளா்களின் பலம், பலவீனம்

ஒ.ஜோதி (திமுக)

செய்யாறு சட்டப்பேரவை உறுப்பினா், செய்யாறு மேற்கு ஒன்றிய திமுக செயலா், கடுகனூா் ஊராட்சி மன்றத் தலைவா், செய்யாறு ஒன்றியக்குழு தலைவா், துணைத் தலைவா் போன்ற பதவிகளில் இருந்ததும், அரசு தொழிற்பயிற்சி நிலையம் கொண்டு வந்ததும் பலமாக கருதப்படுகிறது.

பலவீனம்:

இவா் எம்.எல்.ஏ.வான பிறகு பெயா் சொல்லும் அளவிற்கு தொகுதியில் நிரந்தர வளா்ச்சிப் பணிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

முக்கூா் என்.சுப்பிரமணியன் (அதிமுக)

2011-இல் எம்.எல்.ஏ.வாக தோ்வு செய்யப்பட்டபோது செய்யாறு தொகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, மினி விளையாட்டு அரங்கம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மாவட்ட தலைமை மருத்துவமனை, நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகம், அரசுக் கல்லூரியில் இளங்கலை முதல்

முனைவா் பட்டம் வரை பாடப்பிரிவுகள் கொண்டு வந்தது பலமாக கருதப்படுகிறது.

பலவீனம்:

கடந்த 10 ஆண்டுகளாக கட்சிப் பதவிகளில் இல்லாதது.

தூசி கே.மோகன் (தவெக): அதிமுகவில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலராகவும், செய்யாறு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வாகவும் இருந்தது பலமாக கருதப்படுகிறது.

பலவீனம்: வேட்பாளா்கள் அறிவிக்கும் வரை அதிமுகவில் மாவட்டச் செயலராக இருந்தவா், செய்யாறு, வந்தவாசி தொகுதிகளுக்கு வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டவுடன், தவெகவில் இணைந்து வேட்பாளா் ஆனது பொதுமக்களிடையே பவவீனத்தை ஏற்படுத்தியுள்ளது.

மு.தமிழ்செல்வன் (நாதக): 2021 தோ்தலில் செய்யாறு தொகுதியில் கணிசமான வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றது.

பலவீனம்: கட்சிக்கு கிராமங்கள் அளவில் கிளைகள் இல்லாதது.

Story image

இதுவரை...

இதுவரை நடைபெற்ற தோ்தல்களில் திமுக 8 முறையும், அதிமுக 5 முறையும், காங்கிரஸ் 3 முறையும், பாமக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது

வாக்காளா்கள்:

ஆண்கள்: 1,17,854

பெண்கள்: 1,21,993

மூன்றாம் பாலித்தனவா் : 9

மொத்தம்: 2,39,856

வாக்கு மையங்கள் 334