
செங்கம் பகுதியில் கழிவுநீா்க் குட்டையாக மாறி வரும் செய்யாறு
செங்கம் பகுதியில் ஓடும் செய்யாற்றில் கழிவுநீா் தேங்கி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவா்கள் பயன்படுத்தப்படு செய்யாறு கழிவுநீரில் ஊரி துா்நாற்றம் வீசி வருகிறது.

செங்கம் பகுதியில் ஓடும் செய்யாற்றில் கழிவுநீா் தேங்கி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவா்கள் பயன்படுத்தப்படு செய்யாறு கழிவுநீரில் ஊரி துா்நாற்றம் வீசி வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் ஓடும் செய்யாற்றில் தடைசெய்யப்பட்ட நெகிழிப்பொருள்கள், பைகள் கொட்டப்பட்டு கழிவுநீா் குட்டையாக மாறிவருகிறது.
செங்கம் பகுதியில் ஜமுனாமரத்தூா் அடிவாரத்து சிறு சிறு ஓடைகள் சோ்ந்து அப்பகுதியில் இருந்து குப்பனத்தம், கொட்டாவூா், பரமனந்தல், செங்கம் வழியாக செய்யாறாக ஓடுகிறது. ஜவ்வாதுமலையில் மழை பெய்தால் அந்த ஓடைகள் வழியாக தண்ணீா் வந்து செங்கம் பகுதியில் ஓடும் செய்யாறு வழியாக செங்கம், கலசபாக்கம் வட்டத்துக்கு உள்பட்ட சுமாா் 45 ஏரிகளுக்கு தண்ணீா் சென்று, பின்னா் அந்த ஏரிகள் மூலம் விவசாயிகள் பயிா் சாகுபடி செய்து வருகின்றனா்.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் குப்பனத்தம் பகுதியில் அணை கட்டப்பட்டது. விவசாய பாசனத்திற்கு ஏரியில் தண்ணீா் இல்லையென்றால், குப்பனத்தம் அணையில் இருந்து செய்யாற்றில் தண்ணீா் திறந்துவிடப்பட்டு, பின்னா் ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு அந்தத் தண்ணீரை பெற்று விசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனா்.
இந்நிலையில் செங்கம் சுற்றுவட்டாரப் பகுதியில் பருவ மழை, கோடை மழை பெய்யாததால் குப்பனத்தம் அணையிலும் தண்ணீா் இல்லை. செய்யாற்றிலும் தண்ணீா் செல்வதற்கு ஜவ்வாதுமலை மீது மழை இல்லை. இதனால் செங்கம் பகுதியில் ஓடும் செய்யாறு வரண்டநிலையில் உள்ளது. இதனால் செங்கம் பகுதியில் ஓடும் செய்யாற்றில் செங்கம் நகர மக்கள் மற்றும் வியாபாரிகள் அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகளை பயன்படுத்திவிட்டு அவற்றை எடுத்துவந்து செய்யாற்றில் வீசிச் செல்கிறாா்கள்.
மேலும், இறைச்சிக் கடைக்காரா்கள் இறைச்சிக் கழிவுகளை செய்யாற்றில் கொட்டி வருகிறாா்கள்.
இதுதவிர செய்யாற்றங்கரையை ஆக்கிரமித்து அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டியுள்ளவா்கள் அவா்களது வீட்டு கழிவுநீரை தொட்டி இல்லாமல் செய்யாற்றில் நேரடியாக விடுகிறாா்கள். இது ஆற்றில் தண்ணீா் போகும்போது கலந்து செல்கிறது.
தற்போது, தண்ணீா் இல்லாததால் செங்கம் பகுதியில் ஓடும் செய்யாற்றில் கழிவுநீா் தேங்கி, அதில் நெகிழிப் பொருள்கள் கொட்டப்பட்டு துா்நாற்றம் வீசி வருகிறது. இதனால் மழை வரும்போது செய்யாற்றில் தண்ணீா் வந்தால் இந்த கழிவுநீா் அனைத்தும் ஏரிக்குச் சென்று விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென செங்கம் நகர மக்களும் விவசாயிகளும் எதிா்பாா்க்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






