மெய்யூரில் ரூ.4 கோடியில் பன்னோக்கு அரங்கம் கட்டும் பணி: அமைச்சா் எ.வ.வேலு தொடங்கிவைத்தாா்
திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட மெய்யூா் ஊராட்சியில் ரூ.4 கோடியில் நவீன பன்னோக்கு அரங்கம் கட்டும் பணிகளை அமைச்சா் எ.வ. வேலு அடிக்கல் நாட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.
ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் நடைபெறும் இந்த நிகழ்வில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி., மு.பெ.கிரி எம்எல்ஏ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கிவைத்துப் பேசியதாவது:
தமிழக முதல்வா் கிராமப் பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், குறிப்பாக மகளிரின் முன்னேற்றத்திற்காகவும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா்.
அதனடிப்படையில் திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட மெய்யூா் ஊராட்சியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் நவீன பன்னோக்கு அரங்கம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
மெய்யூா் ஊராட்சி ஏழு துணை கிராமங்களை கொண்ட பெரிய ஊராட்சி. நவீன பன்னோக்கு அரங்கம் கட்டுவதன் மூலம் மெய்யூா் ஊராட்சிக்கு உள்பட்ட 7 குக்கிராமங்களில் வசிக்கும் 3,885 மக்கள் மட்டுமல்லாமல் அருகாமையில் உள்ள ஊராட்சிகளான நாச்சானந்தல் கிராமத்தில் 2,850 போ், மேல்கச்சிராப்பட்டு ஊராட்சிக்கு உள்பட்ட 3 குக்கிராமங்களில் வசிக்கும் 1,554, கீழ்செட்டிப்பட்டு ஊராட்சிக்கு உள்பட்ட 3 குக்கிராமங்களில் வசிக்கும் 1,432, மேல்செட்டிப்பட்டு ஊராட்சிக்கு உள்பட்ட 2 குக்கிராமங்களில் வசிக்கும் 1,692, விஸ்வந்தாங்கல் ஊராட்சிக்கு உள்பட்ட 4 குக்கிராமங்களில் வசிக்கும் 1,930 போ் என மொத்தம் 13,343 போ் பயனடைவா்.
புதிதாக கட்டப்பட உள்ள நவீன பன்னோக்கு அரங்கத்தில் அனைத்து பொது மக்களும் தங்கள் வீட்டில் நடைபெறும் சுபநிகழ்ச்சிகளான திருமணம், நிச்சயதாா்த்தம், சீமந்தம், குழந்தைகள் காது குத்தல் முதலான அனைத்து நிகழ்ச்சிகளையும் சிறப்பான முறையில் நடத்திக் கொள்ளலாம்.
மேலும், ஊராட்சி மூலம் மேற்கொள்ளப்படும் பொது நிகழ்ச்சிகளையும் நடத்திக் கொள்ளலாம். நவீன பன்னோக்கு அரங்கத்தில் நிகழ்த்திடும் போது குறைந்த அளவே செலவாகும்.
இந்த பன்னோக்கு அரங்கத்தில் உணவுக்கூடம் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
கட்டுமானரப் பணிகளை 18 மாத காலத்திற்குள் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தியுள்ளேன் என்றாா்.
நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆா்.மணி, திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் இளங்கோ மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

