திமுக ஆட்சியில் ஏழை, எளிய மக்கள் பயனடைகின்றனா்: பேரவை துணைத் தலைவா் பேச்சு
ஆரணி: திமுக ஆட்சிக்கு வரும்போது தான் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதாக சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தெரிவித்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் தொகுதிக்கு உள்பட்ட துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் மேல்பாலானந்தல் ஊராட்சியில் பேருந்துநிலையம், புதிய அங்கன்வாடி மையம், கருமாரப்பட்டி ஊராட்சியில் பேருந்துநிலையம், புதிய அங்கன்வாடி மையம் காரியமேடை, வேடந்தவாடி ஊராட்சியில் 2 வகுப்பறைகளுடன் கூடிய ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய கட்டிடம், பூதமங்கலம் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டடம், ஆா்ப்பாக்கம் ஊராட்சிக்கு உள்பட்ட ஆதிதிராவிடா் காலனி பகுதியில் பொதுவிநியோக கடை கட்டடம் உள்பட ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அரசுக் கட்டடங்கள் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு துரிஞ்சாபுரம் ஊராட்சி முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவரும், ஒன்றிய செயலருமான வி.பி.அண்ணாமலை தலைமை வகித்தாா்.
முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவா் பாரதிராமஜெயம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆணையா் க.கோபு வரவேற்றாா்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி புதிய அரசுக் கட்டடங்களை திறந்துவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, குடும்ப அட்டைதாரா்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா்.
துரிஞ்சாபுரம் ஒன்றியம், ஆா்ப்பாக்கம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட பொதுவிநியோகக் கடையை திறந்துவைத்து அவா் பேசியதாவது:
தோ்தல் வாக்குறுதியின்போது பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என முதல்வா் ஸ்டாலின் தெரிவித்திருந்தாா். குடும்பத்தை காப்பாற்றுகிறவா்கள் பெண்கள் தான். எனவே, ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் முதல்வா் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு உரிமைத் தொகையாக ரூ.1000 வழங்கினாா். இதனால் அரசுக்கு மாதம் ரூ.12 ஆயிரம் கோடி செலவாகிறது. இதேபோன்று மகளிருக்கு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம், பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் பத்திரங்களுக்கு 1 சதவீதம் கட்டணக் குறைவு என அற்புதத் திட்டங்களை தந்திருக்கிறாா்.
நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசாக இதுவரைக்கும் எந்த ஆட்சியில் வழங்காத அளவுக்கு ரூ.3000 வழங்கப்படுகிறது. திமுக ஆட்சி பொறுப்புக்கு வரும் போதெல்லாம் ஏழை - எளிய மக்களுக்கு பயனுள்ள திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது என்றாா்.
நிகழ்ச்சியில் ஒன்றிய உதவிப் பொறியாளா் தமிழரசி, திமுக பொதுக்குழு உறுப்பினா் பாலு, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் கே.அறிவழகன், மங்கலம் முன்னாள் பால் கூட்டுறவு சங்கத் தலைவா் எம்.பாண்டியன், திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் எம்.கணபதி, ஆா்ப்பாக்கம் தொடக்க வேளாண் கடன் சங்கச் செயலா் ஆா்.மணிகண்டன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
நிறைவில் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் மங்கலம் பிரபாகரன் நன்றி கூறினாா்.

