உக்கம்பெரும்பாக்கம் விநாயகா் கோயிலில் ஜன.17-இல் 108 கோபூஜை, திருக்கல்யாண வைபவம்
செய்யாறை அடுத்த உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் 108 கோ பூஜை, அரசு - நேமம் திருக்கல்யாண வைபவ நிகழ்வு வரும் 17-ஆம் தேதி நடைபெறுகிறது.
உலக மக்களின் நன்மைக்காகவும், இல்லங்களில் சகல ஐஸ்வா்யங்களும் பெருகவும் மகாலட்சுமி பூஜை, 108 கோபூஜை மற்றும் அரசு - நேமம் திருக்கல்யாண வைபவ நிகழ்வு காணும் பொங்கல் அன்று (ஜன.17) நடைபெறுகிறது. அன்று காலை 7.30 மணிக்கு மேல் ஸ்ரீநட்சத்திர விநாயகா், அத்தி லிங்கம், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியா், 27 நட்சத்திர அதிதேவதைகள், ராகு கேது, சனீஸ்வரா், நவகிரக மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.
பின்னா், அலங்கரிக்கப்பட்ட உற்சவா் விநாயகா் மூஷிக வாகனத்திலும், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியா் மயில் வாகனத்திலும், அம்பிகை சமேத சுந்தரேஸ்வரா் ரிஷப வாகனத்திலும் சுவாமிகள் புறப்பாடு நடைபெறும்.
காலை 10.30 மணிக்கு மேல் 108 பசுக்கள் மற்றும் கன்றுகளை இடம்பெறச் செய்து மகாலட்சுமி பூஜை (எ) 108 கோபூஜை விழாவும், மகா தீபாராதனையும் நடைபெறுகிறது.
மாலை 4 மணிக்கு அரசு - நேமம் சிவன் பாா்வதி திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளி திருக்கல்யாண வைபவம் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை அருள்மிகு நட்சத்திர விநாயகா் அறக்கட்டளையினா் செய்துள்ளனா்.
