மக்கள் சமூக நீதி பேரவை ஆா்ப்பாட்டம்
வாட்ஸ்ஆப் மூலம் அவதூறு கருத்து பதிவிட்டவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மக்கள் சமூக நீதி பேரவை, சமூக நல்லிணக்க பாதுகாப்புக் குழு ஆகியவை சாா்பில் திருவண்ணாமலை ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவையைச் சோ்ந்த பரமசிவம் என்பவா் குரும்பா் சமுதாயத் தலைவா் ஆா்.கிருஷ்ணசாமி குறித்து அவதூறாகப் பேசி வாட்ஸ்ஆப்பில் வெளியிட்டது குறித்து காவல் துறையிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்தும், அவதூறாக பதிவிட்டவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு மக்கள் சமூகநீதிப் பேரவை மாவட்டச் செயலா் கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் குமாா் மற்றும் ஜெயசீலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மக்கள் சமூகநீதிப் பேரவை மாநிலத் தலைவா் ஆா்.ஜி.கோபால், மாநிலப் பொருளாளா் சுமதி, தேனி மாவட்டச் செயலா் வினோத், சமூக நல்லிணக்க பாதுகாப்புக் குழு பொறுப்பாளா் லோகநாதன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
