ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

சமத்துவ அறம்

ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை நோக்கி ஒரு சிறிய அடியையாவது எடுத்து வைப்பதே இந்த உலக சமூக நீதி தினத்தை (பிப்.20) கடைப்பிடிப்பதன் உண்மையான வெற்றியைப் பற்றி...

News image
சமத்துவ அறம்
Updated On :1 மார்ச் 2026, 9:40 pm

தினமணி செய்திச் சேவை

- வழக்குரைஞர் ஆர். சங்கீதா

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவப் பேராசானின் ஈரடிப் பிரகடனமே உலக சமூக நீதியின் ஆதி வேர். மானுடப் பரப்பில் பிறப்பால் எந்தவித உயர்வு தாழ்வும் இல்லை என்பதை உரக்கச் சொன்ன அந்த அறச்சீற்றமே, இன்று நவீன உலகின் சமத்துவக் கோட்பாடாக விரிந்து நிற்கிறது.

பிப்ரவரி 20-ஆம் தேதியை உலக சமூக நீதி தினமாக ஐக்கிய நாடுகள் சபை கடந்த 2007-ஆம் ஆண்டு அறிவித்தபோது, அதன் நோக்கம் வறுமை ஒழிப்பு மற்றும் பாலினச் சமத்துவமாக மட்டுமே இருந்தது. ஆனால், 2026-ன் நவீனச் சூழலில், சமூக நீதி என்பது வெறும் பொருளாதாரப் பங்கீடு மட்டுமல்ல; அது அதிகாரப் பகிர்வு, எண்ம (டிஜிட்டல்) சமத்துவம் மற்றும் சூழலியல் சார்ந்த நீதியாகவும் பரிணமித்துள்ளது.

சமூக நீதி என்பது பலவீனமானவர்களுக்குச் செய்யப்படும் கருணையல்ல; அது வலிமையானவர்கள் ஆக்கிரமித்துள்ள இடத்தைச் சமன்படுத்தும் ஓர் அறப் போராட்டம். இந்தியாவின் சமூக நீதி வரலாற்றில் நீதிக் கட்சியின் பங்களிப்பும், மண்டல் கமிஷன் பரிந்துரைகளும் மாபெரும் மௌனப் புரட்சியை ஏற்படுத்தின. 'அதிகாரம் என்பது சிலரது கைகளில் குவிந்திருப்பதைவிட, பலரது கைகளில் பரவிக் கிடப்பதே ஜனநாயகத்தின் பலம்' என்ற டாக்டர் அம்பேத்கரின் கூற்று இன்றும் சமூகத்தின் திசைகாட்டியாக இருக்கிறது.

நவீனச் சிந்தனையில், இடஒதுக்கீடு என்பது ஒரு சலுகையல்ல; மாறாகப் பன்னெடுங்காலமாக மறுக்கப்பட்ட பிரதிநிதித்துவத்தை மீட்டெடுக்கும் ஒரு கருவி. அதிகாரம் கடைக்கோடி மனிதனுக்கும் பகிரப்படும்போதுதான் ஜனநாயகம் முழுமையடைகிறது. இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் 'எண்ம இடைவெளி' என்பது ஒரு நவீன காலத் தீண்டாமையாக உருவெடுத்துள்ளது.

இணைய வசதியும் தொழில்நுட்ப அறிவும் ஒரு பிரிவினருக்கு மட்டுமே கிடைப்பது சமூகப் பிளவை அதிகப்படுத்துகிறது. சர்வதேசத் தொலைத்தொடர்பு மையத்தின் தரவுப்படி, உலகின் 33 சதவீத மக்களுக்கு (சுமார் 266 கோடி பேர்) இன்றும் இணைய வசதி இல்லை. கல்வியும் வேலைவாய்ப்பும் முற்றிலுமாக இணையத்தைச் சார்ந்துள்ள நிலையில், இந்த வசதி மறுக்கப்படுவது மிகப் பெரிய சமூக அநீதியாகும்.

இந்தத் தொழில்நுட்பக் குறைபாட்டை நிரப்பி, அனைவருக்கும் அறிவுசார் வாய்ப்புகளை வழங்குவதே இன்றைய காலத்தின் முதன்மையான சமூக நீதிப் பணியாகும். காலநிலை மாற்றம் என்பது வெறும் புவியியல் மாற்றம் மட்டுமல்ல, அது ஒரு சமூகப் பொருளாதாரப் பிரச்னை. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் செல்வந்தர்களை விட ஏழைகளையே 75 சதவீதம் அதிகம் தாக்குகின்றன.

நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதும், காடுகள் அழிக்கப்படுவதும் நேரடியாகப் பழங்குடியினரின் வாழ்வாதாரத்தைப் பறிக்கின்றன. இயற்கை வளங்களை அனுபவிப்பதில் அனைவருக்கும் சமமான உரிமை வேண்டும் என்பதே நவீன சமூக நீதியின் குரல். நிலமும் நீரும் காற்றும் சிலரின் லாபத்துக்காக சுரண்டப்படாமல், அனைத்து உயிர்களுக்கும் பொதுவானதாக இருப்பதே உண்மையான சூழலியல் நீதி. சமூக நீதி ஏன் இன்றும் எட்டாக்கனியாக இருக்கிறது என்பதற்கு சமீபத்திய புள்ளிவிவரங்கள் சான்றளிக்கின்றன.

ஆக்ஸ்பாம் அறிக்கையின்படி, உலகின் மிகப் பெரும் ஒரு சதவீத செல்வந்தர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளில் உருவான புதிய செல்வத்தில் 63 சதவீதத்தை ஈட்டியுள்ளனர். இந்தியாவில் ஒரு சதவீத மக்கள் நாட்டின் மொத்த செல்வத்தில் சுமார் 40 சதவீதத்தைக் கொண்டுள்ளனர். உலக வங்கியின் புள்ளிவிவரப்படி, சுமார் 70 கோடி மக்கள் இன்றும் கடும் வறுமையில் வாழ்கின்றனர்.

உலகப் பொருளாதார மன்றத்தின் கணிப்புப்படி, தற்போதைய வேகத்தில் சென்றால் ஆண்-பெண் இடையிலான ஊதிய இடைவெளியைக் குறைக்க இன்னும் 131 ஆண்டுகள் ஆகும். இந்தப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் சமூகப் படிநிலையின் அடிமட்டத்தில் இருக்கும் மக்களின் கனவுகளைச் சிதைக்கின்றன.சமூக நீதியின் மற்றொரு முகம் பாலினச் சமத்துவம். வீட்டின் சமையல் அறையிலிருந்து நாட்டின் நாடாளுமன்றம் வரை பெண்கள் எதிர்கொள்ளும் கண்ணுக்குத் தெரியாத தடைகளை உடைப்பதே உண்மையான நீதி.

உலகெங்கிலும் உள்ள நாடாளுமன்றப் பிரதிநிதிகளில் வெறும் 26.5 சதவீதத்தினர் மட்டுமே பெண்கள் என்பது சமத்துவமின்மையின் சாட்சி. வேலைக்குச் செல்லும் பெண்களுக்குச் சமமான ஊதியம், பாதுகாப்பு மற்றும் முடிவெடுக்கும் அதிகாரத்தில் சம பங்கு என்பதே நவீனப் பெண்ணியச் சமூக நீதி. சமூக நீதி என்பது சட்டங்களால் மட்டுமே சாத்தியமாகி விடாது.

'பசியால் வாடும் ஒரு மனிதன் இருக்கும் வரை உலகம் சுதந்திரமானது என்று சொல்ல முடியாது' என்ற மகாத்மா காந்தியின் வரிகள் இன்றும் உலக மனச்சாட்சியை உறுத்திக்கொண்டே இருக்கின்றன. இது தனி மனிதனின் மனமாற்றத்தில் தொடங்க வேண்டும்.

மற்றவரின் உரிமையை மதிப்பதும், சக மனிதனை தன் நிலையிலிருந்து உயர்த்துவதும் ஒவ்வொரு குடிமகனின் தார்மிகக் கடமையாகும். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கணியன் பூங்குன்றனாரின் உலகளாவிய சகோதரத்துவமே சமூக நீதியின் உச்சபட்ச இலக்கு. அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுச் சமூகம் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே, 'யாவர்க்கும் எல்லாம்' என்ற சமத்துவ சமுதாயத்தை நாம் உருவாக்க முடியும்.

இன்றைய நாளில் வெறும் உறுதிமொழிகளோடு நின்றுவிடாமல், ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை நோக்கி ஒரு சிறிய அடியையாவது எடுத்து வைப்பதே இந்த உலக சமூக நீதி தினத்தை (பிப்.20) கடைப்பிடிப்பதன் உண்மையான வெற்றியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.