27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

விட்டுக் கொடுத்தால் உறவு வலுப்படும்!

பிடிவாதம் என்பது ஒருவரை வெல்லப் பயன்படலாம்; ஆனால், ஓர் உறவை வெல்ல விட்டுக்கொடுத்தல் மட்டுமே உறவு வலுப்படும் என்பதைப் பற்றி...

News image
Updated On :2 பிப்ரவரி 2026, 3:30 am IST

- அனந்தபத்மநாபன்

புணே நகரில் அண்மையில் நிகழ்ந்த ஒரு விவாகரத்து வழக்கு, இன்றைய சமூக மாற்றத்தைத் தெளிவாகக் காட்டுகிறது. சுமார் 2 ஆண்டுகள் காதலித்த இருவர் திருமணம் செய்து கொண்டனர். மணமகள் மருத்துவர், மணமகன் பொறியாளர். ஆனால், திருமணம் முடிந்த 24 மணி நேரத்திலேயே அவர்கள் பிரிய முடிவெடுத்து நீதிமன்றம் சென்றனர்.

கணவர் கப்பலில் வேலை பார்ப்பதால் ஏற்படும் நிச்சயமற்ற சூழல் குறித்து காதலிக்கும் காலத்தில் அவர்கள் கவனிக்கத் தவறினர். இந்த எதார்த்தமான சிக்கல், திருமணமான ஒரே நாளில் அவர்களுக்குள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

யாரைத் திருமணம் செய்ய வேண்டும் என்பது தனிப்பட்ட விருப்பமாக இருந்தாலும், திருமணம் செய்துகொண்ட பிறகு, அந்த உறவு சமுதாய ஒழுங்கமைப்பின் அடிப்படை அங்கமாக மாறிவிடுவதாக நீதித் துறை கருதுகிறது. விவாகரத்து என்பது வெறும் சாதாரண ஒப்பந்தம் அல்ல; சட்டம் இதை வெறும் இருவர் சம்மதம் என்று பார்க்காமல், நீதிமன்றத்தின் சம்மதம் அவசியமான ஒரு பொது விவகாரமாக அணுகுகிறது.

திருமணத்தைப் பாதுகாப்பதே நீதிமன்றங்களின் முதல் கடமை என்பதால், அவை உறவை சேமிக்க விரும்புமே தவிர, வேகமாக உடைக்க விரும்பாது. தற்காலிகக் கோபத்தால் புனிதமான பந்தத்தைச் சிதைத்துவிடக் கூடாது என்பதில் சட்டம் உறுதியாக உள்ளது. அதேசமயம், மீட்க முடியாத நிலையை எட்டிய உறவை வலுக்கட்டாயமாக நீட்டிப்பது தம்பதியினருக்கு இழைக்கப்படும் கொடுமை என உச்சநீதிமன்றம் கருதுகிறது.

உறவுகள் முறியும் போது தனிநபர்களின் மன ஆரோக்கியம், வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாப்பதில் நீதித் துறை தற்காலத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்க மாற்றமாகும். இந்தியாவில் ஒரு நாளைக்குச் சராசரியாக 100 புதிய விவாகரத்து வழக்குகள் பதிவாகின்றன. தற்போது நமது நீதிமன்றங்களில் சுமார் 11,95,738 குடும்ப வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இருப்பினும், விவாகரத்து என்பது வாழ்வின் முடிவல்ல; அது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம். அமெரிக்க எழுத்தாளரான எலிசபெத் கில்பர்ட், தனது 31-ஆவது வயதில் ஒரு கடுமையான விவாகரத்தைச் சந்தித்து நிலைகுலைந்த பிறகு, பயணம் மற்றும் கலாசார அறிமுகங்கள் மூலம் தனது மனக்காயங்களுக்குத் தீர்வு கண்டார்.

சர்வதேச அளவில் விவாகரத்துப் போக்குகளை ஆராயும்போது, வளர்ந்த நாடுகளில் ஒரு விசித்திரமான மாற்றம் தென்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஒட்டுமொத்த பிரிவுகள் குறைந்திருந்தாலும், ஐம்பது வயதைக் கடந்தவர்களிடையே ஏற்படும் "நரைத்த கால விவாகரத்து' எனும் போக்கு கடந்த இருபது ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

ஜான் ஹென்டர்சன், சார்லோட் ஹென்டர்சன் போன்ற நீண்ட காலத் தம்பதிகள் 80 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து வாழ்ந்த கின்னஸ் சாதனைகள் நமக்கு நம்பிக்கையூட்டினாலும், இன்றைய சூழலில் தனிமனிதத் தேவைகள் எத்தகைய மாற்றங்களைச் சந்தித்துள்ளன என்பதற்கு இப்போக்குகளே சாட்சி.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கர்ம் சந்த், கர்தாரி சந்த் தம்பதியினர் சுமார் 90 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த மணவாழ்க்கையின் ரகசிய மந்திரமாக அவர்கள் கருதியது அளவான உணவு, நேர்மறையான சிந்தனை மட்டுமே.

இந்தியா, சீனாவில் பொருளாதார மேம்பாடு, பெண்களின் கல்வி அறிவு வளர்ச்சியால், பாரம்பரியக் குடும்பக் கட்டமைப்புகள் மறுபரிசீலனை செய்யப்படுகின்றன. குறிப்பாக, பொருளாதாரச் சுதந்திரம் பெற்ற பெண்கள், சமத்துவமற்ற உறவுகளில் இருந்து விவாகரத்து பெற்று வெளியேறுவதை தங்களின் உரிமையாகக் கருதுகின்றனர். இது வெறும் பிரிவாக மட்டுமன்றி, காலங்காலமாகப் பெண்களின் மீது சுமத்தப்பட்டிருந்த "சகிப்புத்தன்மை' எனும் பிம்பம் உடைவதையும் காட்டுகிறது.

வளைகுடா நாடுகளிலும்கூட நவீனமயமாக்கலின் விளைவாகத் திருமணமான குறுகிய காலத்திலேயே விவாகரத்து செய்யும் தம்பதிகளின் விகிதம் அதிகரித்து வருவது, தனிமனித உரிமைகள், சுதந்திரம் குறித்த விழிப்புணர்வு எல்லைகளைத் தாண்டிப் பரவி வருவதை உறுதிப்படுத்துகிறது.

குடும்ப அமைப்பில் ஏற்படும் இத்தகைய விரிசல்கள் வெறும் தனிநபர் சார்ந்தவை மட்டுமல்ல, அவை ஒரு சமூகத்தின் கூட்டுப் பொறுப்பையும் தட்டியெழுப்புகின்றன. திருமணத்துக்கு முந்தைய ஆலோசனைகள் இன்று ஆடம்பரமாகப் பார்க்கப்படாமல், அவசியமான தேவையாக மாற வேண்டும். உறவுகளுக்குள் நுழையும் முன்பே ஒருவருக்கொருவர் கொண்டுள்ள எதிர்பார்ப்புகள், பொருளாதாரத் திட்டமிடல், பணிச் சூழல் சார்ந்த சவால்களை வெளிப்படையாக விவாதிப்பது அவசியம்.

உறவுகளில் விரிசல் ஏற்பட முக்கியக் காரணம் தம்பதிகளிடையே குறைந்துவரும் நேரடி உரையாடல்களே. மின்னணு சாதனங்களின் பயன்பாட்டால் தம்பதிகள் நேரில் பேசும் நேரம் 45 % குறைந்துவிட்டது. தினமும் ஒரு 30 நிமிஷமாவது கைப்பேசியை ஒதுக்கி வைத்துவிட்டு மனம் விட்டுப் பேசும் பழக்கம் ஆரோக்கியமான உறவுக்கு வழிவகுக்கும்.

இன்றைய மின்னுலகக் காலத்தில் தம்பதியர் அருகருகே அமர்ந்திருந்தாலும், ஆளுக்கொரு கைப்பேசியில் மூழ்கிக் கிடப்பதால் துணையின் உணர்வுகளைவிட, முன்பின் தெரியாதவர்களின் விருப்பக் குறிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திரையிலிருந்து இதயத்துக்கு மாற வேண்டும்.

திருமண வாழ்வின் வெற்றி என்பது சண்டைகளே இல்லாத சூழலில் இல்லை; மாறாக, சண்டைகளுக்குப் பிறகு எப்படி ஒருவரை ஒருவர் மீண்டும் ஏற்றுக்கொள்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. பிடிவாதம் என்பது ஒருவரை வெல்லப் பயன்படலாம்; ஆனால், ஓர் உறவை வெல்ல விட்டுக்கொடுத்தல் மட்டுமே உதவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.