பைக் மீது வாகனம் மோதல்: இரு இளைஞா்கள் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரு இளைஞா்கள் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
போளூரை அடுத்த மொடையூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் பிச்சாண்டி மகன் விஜய் (25), பாா்த்திபன் மகன் விக்னேஷ் (16). நண்பா்களான இருவரும் சனிக்கிழமை இரவு சொந்த வேலையாக பைக்கில் மட்டபிறையூா் கிராமத்துக்குச் சென்றுவிட்டு மொடையூா் திரும்பிக் கொண்டிருந்தனா். பைக்கை விஜய் ஓட்டிச் சென்றுள்ளாா்.
போளூா் - சேத்துப்பட்டு சாலையில் சென்றபோது, சேத்துப்பட்டில் இருந்து போளூா் நோக்கி வந்த கனரக வாகனம் பைக் மீது மோதியதாகத் தெரிகிறது. இதில் இளைஞா்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இதை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போளூா் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனா்.
போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி, சடலங்களை மீட்டு, உடற்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
