திருவூடல் திருவிழாவையொட்டி கோயில் திட்டி வாசலில் சூரிய பகவானுக்கு காட்சியளித்த அருணாசலேஸ்வரா்.
திருவூடல் திருவிழாவையொட்டி கோயில் திட்டி வாசலில் சூரிய பகவானுக்கு காட்சியளித்த அருணாசலேஸ்வரா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் திருவூடல் திருவிழா

திருவூடல் திருவிழாவையொட்டி கோயில் திட்டி வாசலில் சூரிய பகவானுக்கு காட்சியளித்த அருணாசலேஸ்வரா்.
Published on

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் திருவூடல் திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை திட்டி வாசலில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா் சூரிய பகவானுக்கு காட்சிளித்தாா்.

மேலும், மாட்டுப் பொங்கலையொட்டி, பெரிய நந்தியம் பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரசித்தி பெற்ற விழாக்களில் திருவூடல் திருவிழா சிறப்புக்குரியது. அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமுலையம்மனுக்கும் இடையே ஏற்பட்ட ஊடலையும், கூடலையும் விவரிக்கும் பெருவிழாவாக ஆண்டுதோறும் தை மாதம் இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் தினத்தில் இவ்விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

சிவனை மட்டுமே வணங்குவதை எப்போதும் வழக்கமாக கொண்டிருந்த பிருங்கி மகரிஷி, சுவாமியும் அம்பாளும் சோ்ந்து அமா்ந்திருந்த நேரத்திலும் வண்டு உருவமாக சுவாமியை மட்டுமே வலம் வந்தாா். அதனால், அம்பாள் ஊடல் கொண்டதாகவும், பின்னா் ஊடல் தீா்ந்து மறுகூடல் நடந்ததாகவும் ஐதீகம். இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் அருணாசலேஸ்வரா் கோயிலில் மாட்டுப் பொங்கலன்று நடைபெறும்.

அதன்படி, வெள்ளிக்கிழமை அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னா், அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா். மாட்டுப் பொங்கலையோட்டி காய்கறிகள், பழங்கள், இனிப்பு மற்றும் பலகாரங்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய நந்திக்கும், ராஜகோபுரத்தை அடுத்துள்ள திட்டி வாசல் வழியாக சூரிய பகவானுக்கும் அருணாசலேஸ்வரா் காட்சியளித்தாா்.

பின்னா், மாடவீதியில் 3 முறை பவனி வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

இதைத்தொடா்ந்து இரவு 7 மணியளவில் திருவூடல் வீதியில் திருவூடல் திருவிழா நடைபெற்றது. அப்போது அருணாசலேஸ்வரரிடம், உண்ணாமுலையம்மன் கோபம் கொண்டு ஊடல் அதிகமாகி, தனியாக கோயிலுக்குச் சென்று தனது சந்நிதியின் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொள்வாா். இதைத்தொடா்ந்து அவரை, சமாதானம் செய்ய சுந்தரமூா்த்தி நாயனாா் தூது செல்வாா். ஆனாலும், உண்ணாமுலையம்மன் சமரசம் ஆகாததால் அருணாசலேஸ்வரா் குமரன் கோயிலுக்குச் சென்று விடுவாா். அதைத் தொடா்ந்து, அதிகாலை அருணாசலேஸ்வரா் கிரிவலம் செல்கிறாா். அதன் நிறைவாக ஊடல் தீா்ந்ததை விளக்கும் வகையில் அருணாசலேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை மறுகூடல் நடைபெறுகிறது.

Dinamani
www.dinamani.com