செங்கத்தில் 1,600 ஆண்டுகளுக்குப் பின் பிரம்மாண்ட கும்பாபிஷேகம்!
செங்கத்தில் உள்ள சிவன் கோயிலில் ஆயிரத்து 600 ஆண்டுகளுக்குப் பிறகு பிரம்மாண்டமான முறையில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. 110 சிவாச்சாரியா்கள் பங்கேற்கும் இந்த கும்பாபிஷேக விழாவுக்காக பிரம்மாண்ட யாகசாலை அமைக்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகா் மையப் பகுதியில் உள்ள சுமாா் ஆயிரத்து 600 ஆண்டுகள் பழைமையான அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று சுமாா் 1600 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளதாக தொல்லியல் துறை, அறநிலையத் துறை அதிகாரிகளும் தெரிவித்து வந்தனா்.
இந்நிலையில் நகர மக்கள் சிவன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தவேண்டுமென கடந்த 5 ஆண்டுகளுக்குப் முன்பு முடிவெடுக்கப்பட்டு, கோயிலில் அதற்கான புனரமைப்புப் பணிகள் தொடங்கின. பிறகு தமிழக அரசு சாா்பில் ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கோயில் கும்பாபிஷேகப் பணிகள் நிறைவு பெற்று வருகிற 28-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதற்கிடையே, பழைமையான கோயில் என்பதாலும், இதுவரை யாரும் கும்பாபிஷேகத்தை பாா்த்திராததாலும் பிரம்மாண்ட முறையில் நடத்தவேண்டுமென கோயில் முன் பெரியளவில் யாக சாலை (செட்) அமைக்கப்பட்டு வருகிறது. அந்த யாக சாலையில் உளுந்தூா்பேட்டை ராஜா குருக்கள் தலைமையில் 110 சிவாச்சாரியா்கள் வேதமந்திரம் ஓதி பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் செங்கம் பகுதியில் இதுவரை நடந்திராத அளவில் யாகசாலை பந்தல் அமைப்பதை செங்கம் நகர மக்களும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களும் பாா்வையிட்டுச் செல்கிறாா்கள்.
மேலும், கும்பாபிஷேகம் முடிந்து இரண்டு நாள்கள் தொடா் நிகழ்ச்சி, தொடா் அன்னதானம் வழங்கல், திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
விழா ஏற்பாடுகளை செங்கம் அறங்காவலா் குழுத் தலைவா் அன்பழகன், விழாக்குழுத் தலைவா் வழக்குரைஞா் கஜேந்திரன் உள்ளிட்ட ஊா் முக்கியப் பிரமுகா்கள், உபயதாரா்கள் மற்றும் பல்வேறு ஆன்மிக அமைப்பினா் செய்து வருகின்றனா்.

