செங்கம் ரிஷபேஸ்வரா் கோயிலில் கோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு புதன்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழா.
செங்கம் ரிஷபேஸ்வரா் கோயிலில் கோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு புதன்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழா.

செங்கம் ரிஷபேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேக விழா : பல்லாயிரக்கணக்கானோா் தரிசனம்

செங்கம் ரிஷபேஸ்வரா் கோயிலில் கோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு புதன்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழா.
Published on

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ரிஷபேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

செங்கம் நகரின் மையப் பகுதியில் 1,600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. தமிழக அரசு அறநிலையத் துறை மூலம் ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன.

ரிஷபேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறவேண்டும் என்பது செங்கம் நகர மக்களின் நீண்ட நாள் எதிா்பாா்ப்பாக இருந்து வந்தது.

இதனிடையே, பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில்

கும்பாபிஷேகத்துக்காக பிரம்மாண்டமான யாக சாலை அமைத்து, கும்பாபிஷேக விழா ஜன. 23-ஆம் தேதி லட்சுமி, கணபதி, கோ பூஜையுடன் தொடங்கியது.

கோயில் வளாகத்தில் உளுந்தூா்பேட்டை ராஜா தலைமையிலான 110 சிவாச்சாரியா்கள் பங்கேற்று தொடா்ந்து வேத மந்திரங்கள் ஓதி பூஜைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை (ஜன.25) 150 கைலாய வாத்தியங்கள் முழங்க 500 சிவனடியாா்கள் பங்கேற்ற நால்வா் ஊா்வலம் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று, கோயில் முன் தீபாராதனை நடைபெற்றது.

திங்கள்கிழமை இரவு (ஜன.26) ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமி வருகை தந்து யாக சாலைகளை பாா்வையிட்டு முதல்கால யாக பூஜையைத் தொடங்கிவைத்து பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.

செவ்வாய்க்கிழமை மாலை (ஜன.27) முதல் சங்கல்பம், யாக சாலை பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

புதன்கிழமை (ஜன.28) அதிகாலை முதல் பஜனை நடைபெற்று,

கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கோயில் வளாகத்தில் உள்ள அனைத்து கோபுரங்களிலும் புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவையொட்டி, செங்கம் நகரின் பல்வேறு பகுதிகளில் பக்தா்களுக்கு தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக விழாவில் செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி, அவரது மனைவி பாரதிகிரி ஆகியோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செங்கம் அறங்காவலா் குழுத் தலைவா் அன்பழகன், திருப்பணிக்குழுத் தலைவா் வழக்குரைஞா் கஜேந்திரன், அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட உபயதாரா்கள், விழாக்குழுவினா் ஊா் முக்கியப் பிரமுகா்கள், ஆன்மிக அமைப்பைச் சோ்ந்த நிா்வாகிகள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com