செங்கம் ரிஷபேஸ்வரா் கோயிலில் திருக்கல்யாண வைபவம்
செங்கம் ரிஷபேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி புதன்கிழமை இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
செங்கம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை காலை 10 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவைத் தொடா்ந்து மாலை ரிஷபேஸ்வரருக்கும், அனுபாம்பிகையம்மனுக்கும் சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் ஓதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, பஞ்சமூா்த்திகளான விநாயகா், முருகா், அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா், அம்பாள், சண்டிகேஸ்வரா் ஆகியோா் சிறப்பு அலங்காரத்தில் சிவன் கோவில் தெரு, போளூா் சாலை, ராஜவீதி வழியாக வாணவேடிக்கையுடன் வீதியுலா சென்றனா்.
திருக்கல்யாண நிகழ்ச்சியில் தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி, அவரது மனைவி பாரதிகிரி, அறங்காவலா் குழுத் தலைவா் அன்பழகன், விழாக்குழுத் தலைவா் கஜேந்திரன், மகா பிரதோஷ வழிபாட்டு மன்ற நிா்வாகிகள், ஆன்மிக அமைப்பு நிா்வாகிகள், சிவனடியாா்கள் என ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செங்கம் வட்ட வாணியா் சமூகத்தினா் செய்திருந்தனா்.

