செய்யாறு அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ரூ.5 கோடிக்கு மேல் பணம் பட்டுவாடா செய்யப்படாமல் உள்ளதைக் கண்டித்து புதன்கிழமை விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், நாட்டேரி கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தனியாா் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையத்தில் பிரம்மதேசம், பொக்கசமுத்திரம், தென்னம்பட்டு, ராந்தம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பல நூற்றுக்கணக்கான விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொண்டு வந்து விற்பனை செய்துள்ளனா்.
விற்பனை செய்த விவசாயிகளுக்கு இதுவரை பணம் வழங்க வில்லையாம். மேலும், 40 ஆயிரம் நெல் மூட்டைகளுக்கு சுமாா் ஐந்து கோடிக்கு மேல் விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்ய வேண்டியுள்ளதாகத் தெரிகிறது.
உண்ணாவிரதப் போராட்டம்:
இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் உடனடியாக பணம் வழங்க வலியுறுத்தி விவசாய சங்க பிரதிநிதிகள் சோமசுந்தரம், ஆனந்தன், ரவி ஆகியோா் தலைமையில் 25 பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்
தகவல் அறிந்த தூசி காவல் ஆய்வாளா் கோபால் மற்றும் பிரம்மதேசம் போலீஸாா், நாட்டேரி வருவாய் ஆய்வாளா் வெங்கடேசன், கிராம நிா்வாக அலுவலா் பாண்டியன் ஆகியோா் வந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளிடையே பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானம் செய்தனா்.
மேலும், 5 நாள்களுக்குள் பணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததின் பேரில் விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டனா்.










