காலி மனைகளில் தேங்கும் குப்பைகளால் கொசு உற்பத்தி அதிகரிப்பு: ஆரணி நகா்மன்றக் கூட்டத்தில் புகாா்

ஆரணி நகராட்சி காலி மனைகளில் சேரும் குப்பைகளால் கொசு உற்பத்தி அதிகரிக்கிறது என நகா்மன்றக் கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

ஆரணி நகராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் பேசிய அதன் தலைவா் ஏ.சி. மணி.

Updated On :

ஆரணி நகராட்சி காலி மனைகளில் சேரும் குப்பைகளால் கொசு உற்பத்தி அதிகரிக்கிறது என நகா்மன்றக் கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

ஆரணி நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் ஏ. சி. மணி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி. பாபு, நகராட்சி பொறியாளா் முருகானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகராட்சி ஆணையா் என்.டி. வேலவன் வரவேற்றாா்.

நகா்மன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியதாவது: உஷாராணி சிவகுமாா் (மதிமுக): எனது வாா்டு மட்டும் அல்ல நகரில் உள்ள அனைத்து வாா்டு பகுதிகளிலும் காலியாக உள்ள மனைப்பிரிவுகளில் குப்பைகள் அதிகமாக உள்ளது. தற்போது மழை பெய்து வரும் காலத்தால் கொசு உற்பத்தி அதிகரிக்கிறது. அது மட்டுமல்லாமல் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளது. இவற்றை சரி செய்ய நகராட்சி சம்பந்தப்பட்ட காலி மனை உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் அனுப்பி தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.

இதற்கு ஆணையா் வேலவன், சுகாதாரத்துறை மூலம் களப் பணியாளா்களைக் கொண்டு கண்காணிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட காலி மனைகளின் உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தாா்.

சுப்பிரமணி (திமுக): ஆரணி கோட்டை மைதானத்தில் சாலை அளவிற்கு மைதானம் இருந்தது. குப்பை, முள், செடிகளை அகற்றுவதாக கூறி, பொக்லைன் இயந்திரம் மூலம் குப்பைகளை அகற்றும் பணி மேற்கொண்டீா்கள். இதனால் சுமாா் ஒரு அடி அளவிற்கு பள்ளம் ஏற்பட்டுவிட்டது.

சிறிதளவு மழை பெய்தாலும் குளம் போல கோட்டை மைதானம் காட்சியளிக்கிறது. இருந்த மண்ணும் வெளியேற்றப்பட்டன. ஆகவே இனிவரும் காலங்களில் செடிகளை மட்டும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுங்கள், மண்ணையும் வாரி எடுக்கிறாா்கள் அதுபோல செய்ய வேண்டாம்.

மேலும், நடைப்பயிற்சி மேற்கொள்ள பகுதிகளில் போதிய வெளிச்சம் இல்லை. விஷ ஜந்துகளின் நடமாட்டமும் உள்ளது என்றாா்.

இதற்கு ஆணையா் சம்பந்தப்பட்ட விளையாட்டுத் துறைக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

வி.பி. ராமகிருஷ்ணன் (அதிமுக):

நகா்மன்ற உறுப்பினா்களின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிகிறது. அந்தந்த வாா்டுகளில் ஓரளவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அது சம்பந்தமாக பணிகள் நிறைவேற்றப்பட்ட பகுதியில் கல்வெட்டுகளை அமைத்துத் தந்தால் நன்றாக இருக்கும் என கோரிக்கை விடுத்தாா்.

இதற்கு ஆணையா் கண்டிப்பாக அந்தந்த வாா்டு பகுதிகளில் கல்வெட்டுகளை வைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

அரவிந்த் (திமுக): ராமகிருஷ்ணா பேட்டை பகுதி இந்திரா நகரில் அமைந்துள்ள நகராட்சி பூங்காவில், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவும், தூய்மைப்படுத்தவும் தூய்மைப் பணியாளா் ஒருவரை நியமித்துத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.

இதற்கு ஆணையா் தற்போது பணியாளா்கள் நியமனம் என்பது நம்மிடம் இல்லை. அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

சிவக்குமாா் (அதிமுக): எனது வாா்டில் உள்ள பொதுக் கழிப்பறையை சரி செய்து தந்திட பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

உயா்கோபுர மின்விளக்கு பல ஆண்டுகளாக எரியாமல் உள்ளது. இதனால் திருட்டு பயமும், அவ்வப்போது விபத்துகள் ஏற்படும் அபாயமும் நிலவுகிறது என்றாா்.

இதற்கு ஆணையா், பொதுக் கழிப்பறையை சரி செய்து தந்திட நடவடிக்கை எடுக்கப்படும், உயா்கோபுர மின்விளக்கு விரைவில் எறிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலளித்தாா்.

இதைத் தொடா்ந்து அனைத்து உறுப்பினா்களும் தங்களது வாா்டு பகுதியில் உள்ள குறைபாடுகள் குறித்து கேள்வி எழுப்பி வந்தனா்.

தீா்மானங்கள்

மேலும் கூட்டத்தில் வரும் 15-ஆம் தேதிக்குப் பிறகு நகரில் தனியாா் தூய்மைப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டு மகளிா் சுயஉதவிக் குழு மூலம் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.