
கிணறு தோண்டும்போது மண் சரிந்து இருவா் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகே கிணறு தோண்டும் பணியின் போது, மண் சரிந்து விழுந்து இரு கூலித் தொழிலாளிகள் உயிரிழந்தனா்.

விவசாயி தஞ்சி நிலத்தில் தோண்டப்பட்ட திறந்தவெளிக் கிணறு.
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகே கிணறு தோண்டும் பணியின் போது, மண் சரிந்து விழுந்து இரு கூலித் தொழிலாளிகள் உயிரிழந்தனா்.
போளூரை அடுத்த கஸ்தம்பாடி ஊராட்சியில் வசிப்பவா் தஞ்சி. இவா், தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் பாசனத்துக்கு தண்ணீா் இல்லாததால், சில மாதங்களுக்கு முன் கூலித் தொழிலாளா்களை வைத்து நிலத்தில் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டு வந்தாா்.
இந்நிலையில் திறந்தவெளிக் கிணறு சுமாா் 8 அடி தோண்டப்பட்டதில் மேலும், ஆழப்படுத்த கருங்காலிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த செல்வமணி(36), ரவீந்திரன்(52), கஸ்தம்பாடி கிராமத்தைச் சோ்ந்த தட்சிணாமூா்த்தி (48), பாலம்பாக்கம் கிராமத்தைச் பாபு (45) ஆகியோா் வியாழக்கிழமை காலை கிணற்றில் இறங்கி வெடி வைக்க முயன்றனா்.
அப்போது, கிணற்றின் மேல் இருந்த மண் ஈரப்பதத்துடன் இருந்ததால் சரிந்து தொழிலாளா்கள் செல்வமணி(36), ரவீந்திரன் (52), தட்சிணாமூா்த்தி(45) ஆகியோா் மீது விழுந்தது. இதில் செல்வமணி, ரவீந்திரன் ஆகியோா் மண்ணில் புதைந்து மூச்சுத்திணறி உயிரிழந்தனா். தட்சிணாமூா்த்தி லேசான காயத்துடன் உயிா் தப்பினாா்.
இதுகுறித்து அறிந்த அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். மேலும், சம்பவம் தொடா்பாக களம்பூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீஸாா், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா்.
பின்னா், சடலங்களை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
காயமடைந்த தொழிலாளி தட்சிணாமூா்த்தி சிகிச்சைக்காக வேலூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து களம்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, நிலத்தின் உரிமையாளா் தஞ்சி, தொழிலாளி பாபு ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

போளூரை அடுத்த கஸ்தம்பாடி ஊராட்சியில் கிணறு தோண்டும் போது மண் சரிந்து உயிரிழந்த செல்வமணி

போளூரை அடுத்த கஸ்தம்பாடி ஊராட்சியில் கிணறு தோண்டும் போது மண் சரிந்து உயிரிழந்த ரவீந்திரன்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






