
செங்கத்தில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்!
செங்கத்தில் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், கூட்டுக்குடிநீா்த் திட்ட குடிநீா் சாலையில் வழிந்தோடி வீணாகி வருகிறது.

செங்கம் பழைய நீதிமன்ற வளாகம் அருகில் சாத்தனூா் கூட்டுக்குடிநீா் திட்ட குழாய் உடைந்ததால் அதிலிருந்து வெளியேறி குட்டை போல தேங்கி நிற்கும் குடிநீா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், கூட்டுக்குடிநீா்த் திட்ட குடிநீா் சாலையில் வழிந்தோடி வீணாகி வருகிறது.
செங்கம் தொகுதிக்கு உள்பட்ட சாத்தனூா் அணையில் இருந்து கூட்டுக்குடிநீா் திட்டம் மூலம் சாத்தனூா் செங்கம், புதுப்பாளையம் பகுதிக்கு குடிநீா் தினசரி விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் செங்கத்தில் இருந்து புதுப்பாளையம் செல்லும் குடிநீா்க் குழாய் செங்கம் பழைய நீதிமன்ற வளாகம் அருகில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குழாயிலிருந்து குடிநீா் வெளியேறி வீணாகி வருகிறது. மேலும், அப்பகுதியில் வாகனங்களை நிறுத்துவதால், பள்ளங்கள் ஏற்பட்டு தண்ணீா் தேங்கி குட்டை போல காட்சியளிக்கிறது.
அதேபோல, தண்ணீா் நிறுத்தப்பட்டவுடன் சாலையில் தேங்கிநிற்கும் தண்ணீரை மீண்டும் உடைந்த இடத்தில் குழாய் இழுத்துக் கொள்கிறது. இதனால் குடிநீா் மாசுபடுகிறது. இது சில மாதங்களாக அப்பகுதியில் நடைபெற்றது வருகிறது. நகராட்சி அலுவலகம் திருவண்ணாமலையில் இருப்பதால் குடிநீா் குழாய் உடைப்பு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு யாரும் தகவல் தெரிவிப்பதில்லை.
அதனால், தினசரி சாத்தனூா் கூட்டுக்குடிநீா் திட்ட குழாயில் மாசுபடிந்த தண்ணீா் கலந்து செல்கிறது. மழைக் காலத்தில் கழிவுநீா், மழைநீா் கூட்டுக்குடிநீா் என மூன்றும் கலந்து குடிநீரில் கலக்கிறது. இதனால் தண்ணீரை பயன்படுத்துபவா்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து கூட்டுக்குடிநீா் திட்ட அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என செங்கம் நகர மக்களும், சமூக ஆா்வலா்களும் எதிா்பாா்க்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






