பாலாற்றில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் மணல் கொள்ளை ?

ஆம்பூர் அருகே பாலாற்றில் ஆக்கிரமிப்பு அகற்றம் மற்றும் கால்வாய் அமைப்பு என்ற பெயரில் மணல் கொள்ளை நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.
பாலாற்றில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் மணல் கொள்ளை ?
Updated on
2 min read

ஆம்பூர் அருகே பாலாற்றில் ஆக்கிரமிப்பு அகற்றம் மற்றும் கால்வாய் அமைப்பு என்ற பெயரில் மணல் கொள்ளை நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.
மழை காரணமாக பாலாற்றில் அதிக வெள்ளம் வருவதால் தேவலாபுரம், துத்திப்பட்டு ஆகிய கிராம பாலாற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆம்பூர் வட்டாட்சியர் மீராபென் காந்தி பொதுப் பணித் துறை நீர்வள ஆதார அமைப்புக்கு கடிதம் அனுப்பினார். 
அதன் அடிப்படையில், இரு கிராம எல்லைக்கு உள்பட்ட பாலாற்று பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை பொதுப் பணித் துறை ஒப்பந்ததாரர் மூலம் கடந்த ஒரு வாரமாக மேற்கொண்டு வருகிறது. 
ஆக்கிரமிப்பு அகற்றும் போது கிடைக்கும் மண், மணலை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், மணல், மண் எடுக்க பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மணல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக புகார் கூறப்படுகிறது. 
மேலும், ஆக்கிரமிப்பு அகற்றம், கால்வாய் அமைத்தல் என்ற பெயரில் பாலாற்றில் இருந்து அதிகளவு மணல் அள்ளப்பட்டு முறைகேடாக விற்பனை செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
மணல் எடுப்போருக்கு, பொதுப் பணித் துறையால் வழங்கப்படும் அனுமதி சீட்டில் மண், மணல், வண்டல் மண், சவ்வுடு என்று குறிப்பிடப்படாமல் ஏனையவை என்று குறிப்பிட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாலாற்றில் எடுக்கப்படும் மணல் டிராக்டர், டிப்பர் லாரிகளில் நிரப்பப்பட்டு, அதன் மேற்பரப்பில் மட்டும் சிறிதளவு மண் கொட்டப்பட்டு மூடப்படுகிறது. இவ்வாறு எடுத்துச் செல்லப்படும் மணல் பல்வேறு பகுதிகளில் முறைகேடாக விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
மேலும், ஆக்கிரமிப்பு அகற்றி கால்வாய் வெட்டும் போது சுமார் 5 அடி ஆழம் மட்டுமே வெட்டப்பட வேண்டும் என பொதுப் பணித் துறையினர் ஒப்பந்ததாரரிடம் கூறியுள்ளனர். ஆனால், 5 அடிக்கு மேல் அதிகளவு ஆழத்தில் தோண்டப்பட்டு மண், மணல் எடுக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்படாத டிராக்டர் டிப்பர்கள்: மணல் எடுத்துச் செல்ல சுமார் 100-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள், டிராக்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான டிராக்டர்களின் பின்புறம் இணைக்கப்பட்டுள்ள டிப்பர்கள் பதிவெண் இல்லாமல் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். 
இதுகுறித்த புகாரின் பேரில் ஆம்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் கருணாநிதி, தேவலாபுரம், துத்திப்பட்டு பாலாறு ஆக்கிரமிப்பு அகற்றும் பகுதிக்கு புதன்கிழமை சென்றார். ஆனால் அங்கு நின்று கொண்டிருந்த எந்த வாகனத்தையுமே அவர் ஆய்வு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
மிரட்டுவதாகக் கூறும் வட்டாட்சியர்: ஆக்கிரமிப்பை அகற்றிய பிறகு அங்குள்ள மண் மற்றும் மணலை எடுத்துச் செல்வதற்கு ஆட்சியர், திருப்பத்தூர் சார் ஆட்சியர் ஆகியோர் அனுமதி வழங்கியுள்ளதாக வருவாய்த் துறையினர் கூறும் நிலையில், வாகனங்களில் மணல் நிரப்பிவிட்டு அதன் மீது மண் போட்டு முறைகேடாக மணல் எடுத்துச் செல்வது குறித்து வட்டாட்சியர் மீராபென் காந்தியிடம் செய்தியாளர்கள் புதன்கிழமை கேட்டனர். 
அதற்கு அவர், என்னை ஏன் மிரட்டுகிறீர்கள், பணி செய்யவிடாமல் தடுக்கிறீர்களா என செய்தியாளர்களிடமே எதிர் கேள்வி எழுப்பினார். மேலும், புதன்கிழமை எடுக்கப்பட்ட மண், மணல் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இது உயரதிகாரிகளின் உத்தரவின் பேரில் தான் செய்கிறோம் என்றார்.
இதைத் தொடர்ந்து, குடியாத்தம் பொதுப் பணித் துறை நீர்வள ஆதார அமைப்பின் உதவிப் பொறியாளர் ரவி, ஆக்கிரமிப்பு அகற்றுமிடத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார். 
அப்போது அவர், குறிப்பிட்ட அளவு ஆழத்தைவிட ஏன் அதிகளவு பள்ளம் வெட்டினீர்கள்? என பொதுப் பணித் துறை ஒப்பந்ததாரரிடம் கேள்வி எழுப்பினார். பின்னர், கால்வாய் வெட்டும் பணியை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.
ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் நடைபெறும் மணல் கொள்ளையை அதிகாரிகள் தடுக்காமல் இருப்பது ஏன்? என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com