ரூ. 3 கோடி காலாவதி உணவுப் பொருள் பறிமுதல்: 4 பேர் கைது
வேலூர் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 3 கோடி மதிப்பிலான காலாவதியான உணவு மசாலாப் பொருள்களை வியாழக்கிழமை பறிமுதல்


வேலூர் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 3 கோடி மதிப்பிலான காலாவதியான உணவு மசாலாப் பொருள்களை வியாழக்கிழமை பறிமுதல் செய்த அதிகாரிகள் கட்டடத்துக்கு சீல் வைத்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர் அருகே இறையன்காட்டில் ரவமணிக்கு சொந்தமான 2 அடுக்குமாடி கொண்ட குடோனை காட்பாடியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் வாடகைக்கு எடுத்து பிரபல மசாலா நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவை ஓராண்டுக்கும் மேலாக நடத்தி வந்தார். இக்கிடங்கிற்கு பல மாதங்களாக வாடகை பாக்கி வைத்திருந்ததால், இருவருக்கிடையே பிரச்னை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், தனக்குச் சொந்தமான குடோனில் காலாவதியான உணவுப் பொருள்கள் பதுக்கி வைத்து சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியும் அண்மையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில் ரவமணி மனு அளித்தார்.
அதன் பேரில், மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான அதிகாரிகள் கிடங்கில் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஏற்கெனவே சந்தையில் பிரபலமாக இருந்த மசாலா நிறுவனத்தின் காலாவதியான உணவு பாக்கெட்டுகளின் மீது மறு தயாரிப்பு தேதி அச்சிட்டு விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. காலாவதியான மிளகாய், மல்லித்தூள், சாம்பார், இட்லி பொடி உள்ளிட்ட 150 வகையான உணவுப் பொருள்கள் டன் கணக்கில் இருந்தன.
இதுகுறித்து பள்ளிகொண்டா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு சென்ற போலீஸார், ஊழியர்கள் நேதாஜி (38), கண்ணன் (38), ஞானசேகர் (37), நிஸார் (26) ஆகிய 4 பேரை கைது செய்தனர். தலைமறைவான உரிமையாளர் ரவிச்சந்திரனை தேடிவருகின்றனர்.
இதையடுத்து வேலூர் வருவாய் கோட்டாட்சியர் இ.செல்வராஜ் தலைமையிலான வருவாய்த் துறையினர் அந்தக் கட்டடத்துக்கு சீல் வைத்தனர்.
இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு பிரபல உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் விற்பனை தலைமையகம் சென்னையில் உள்ளது. ஓராண்டுக்கு முன் அந்த நிறுவனம் பல்வேறு காரணங்களால் மூடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், அந்த நிறுவனத்தில் இருந்து காலாவதியான பொருள்களை குறைந்த விலையில் வாங்கி, அந்த பாக்கெட்டுகளில் தயாரிப்பு, காலாவதி தேதியை ரசாயனத்தை பயன்படுத்தி அழித்து, நவீன லேசர் இயந்திரத்தின் மூலம் புதிய தயாரிப்பு, காலாவதி தேதியை அச்சிட்டு சந்தையில் விற்றுள்ளனர்.
தலைமறைவாகியுள்ள ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்ட பிறகே, இங்கிருந்து எந்தெந்த பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது என்பது தெரியவரும்.
சீல் வைக்கப்பட்டுள்ள கட்டடத்தில் இருந்து ரூ. 3 கோடி மதிப்பிலான காலாவதி உணவுப் பொருள்கள், நவீன கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...