கொள்ளைக்கு துணைபோகும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள்

வேலூரில் அரசு வழங்கும் செட்டாப் பாக்ஸ்களை விநியோகிக்காமல் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கூடுதல் லாபம் சம்பாதிக்கும் நோக்கில் தனியார் நிறுவனங்களுக்கு
Updated on
2 min read

வேலூரில் அரசு வழங்கும் செட்டாப் பாக்ஸ்களை விநியோகிக்காமல் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கூடுதல் லாபம் சம்பாதிக்கும் நோக்கில் தனியார் நிறுவனங்களுக்கு துணைபோவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாநிலம் முழுவதிலும் கேபிள் டிவி டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. அதன்படி, அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் வழங்கப்படும் அனைத்து சேனல்களையும் பார்க்க ஏதுவாக செட்டாப் பாக்ஸ் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
அதேவேளையில், செட்டாப் பாக்ஸ் விற்பனையில் இறங்கியுள்ள தனியார் நிறுவனங்கள் தங்களது வணிகத்தை பெருக்கும் நோக்கில் கவர்ச்சிகரமான திட்டங்கள் மூலம் கேபிள் டிவி ஆபரேட்டர்களை கவரும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன.
அதாவது, வேலூர் மாவட்டத்தைப் பொருத்தமட்டில் அரசு கேபிள் டிவி நிறுவன கணக்கில் 3 லட்சத்து 50 ஆயிரம் வீடுகளில் கேபிள் இணைப்புகள் இருப்பதாகவும், அங்கீகரிக்கப்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் 2 ஆயிரம் பேர் உள்ளதாகவும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஆனால், அரசு கேபிள் டிவி நிறுவனத்தை ஏமாற்றி கணக்கு கொடுக்கப்பட்டிருப்பதாகவும், உண்மையில் சுமார் 4.5 லட்சம் வரையில் சந்தாதாரர்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன புள்ளிவிவரப்படி 3.5 லட்சம் வீடுகளுக்கு இலவசமாக செட்டாப் பாக்ஸ் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலம் விநியோகிக்கப்படவுள்ளது. தற்போது வரை 15 ஆயிரம் குடியிருப்புகளுக்கு செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. அரசால் வழங்கப்படும் செட்டாப் பாக்ஸை பெற்று, சேனல்களை பார்க்க இரண்டு திட்டங்கள் உள்ளன. முதலாவதாக மாதத்துக்கு ரூ.125 செலுத்தினால் 210 சேனல்களை பார்க்க முடியும். இரண்டாவது திட்டத்தின்படி, ரூ.175 செலுத்தினால் 310 சேனல்களை பார்க்க முடியும்.
இந்நிலையில், அரசால் இலவசமாக வழங்கப்படும் செட்டாப் பாக்ஸை பொருத்தினால் சேனல்கள் தெளிவாக தெரியாது என்றும், தனியார் செட்டாப் பாக்ஸை பொருத்தினால் உள்ளூர் சேனல்கள் உள்பட அதிக எண்ணிக்கையில் சேனல்களை கண்டு ரசிக்க முடியுமென சந்தாதாரர்கள் ஏமாற்றப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
மேற்கண்டவாறு பொதுமக்களிடம் கூறி, தனியார் நிறுவனங்களால் விற்கப்படும் செட்டாப் பாக்ஸை ரூ.500 முதல் ரூ.1,000 வரையில் விற்கப்படுவது தெரியவந்துள்ளது. மேலும், தற்போது அரசுக் கேபிளுக்கு மாதக் கட்டணமாக ரூ.130 வசூலிக்கப்படுகிறது. செட்டாப் பாக்ஸ் முறை நடைமுறைக்கு வந்த பின்னர், இந்த கட்டணம் ரூ.180 ஆக உயர்த்தப்படும்.
இருப்பினும் தனியார் செட்டாப் பாக்ஸ்களை பொதுமக்களிடம் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் திணித்து வருகின்றனர். இதனையும் மீறி அரசால் வழங்கப்படும் செட்டாப் பாக்ஸ் தான் வேண்டுமெனக் கூறினால் இணைப்பை துண்டித்து விடுவோம் என மிரட்டுவதாக சந்தாதாரர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இதுபோன்ற சம்பவம் காட்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமாக நடப்பதாக அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இதுகுறித்து சத்துவாச்சாரியில் உள்ள அரசு கேபிள் டிவி நிறுவன அதிகாரியிடம் கேட்டபோது, 'எங்களிடம் உள்ள புள்ளிவிவரப்படி செட்டாப் பாக்ஸ் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அரசால் வழங்கப்படும் செட்டாப் பாக்ஸ் இலவசம் என்பதோடு, மாதத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடியாது. பெரும்பாலான கேபிள் டிவி ஆபரேட்டர்கள் செட்டாப் பாக்ஸை விநியோகிக்க ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஏராளமான புகார்கள் தொடர்ந்து வருகின்றன. அரசால் வழங்கப்படும் செட்டாப் பாக்ஸை குடியிருப்புகளில் பொருத்த மறுத்தால் சம்பந்தப்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com