ஆற்காடு அருகே பள்ளி மாணவியை கொலை செய்த வழக்கில் இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
ஆற்காட்டை அடுத்த தாழனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் டீக்காராமன். இவரது மனைவி ராதா. இவர்களது மகன் நவீன்குமார் (19), மகள் சங்கீதா (16). ராதா கணவரைப் பிரிந்து ஆற்காடு மசாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பழனியுடன் கேவேளூர் அருகே உள்ள ஒழலை கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வந்தார். இதில், பழனியும், ராதாவும் இறந்துவிட்டனர். சங்கீதா கேவேளூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், நவீன்குமாரும், சங்கீதாவும் கடந்த 14-ஆம் தேதி தாழனூரில் உள்ள தந்தை டீக்காராமன் வீட்டிற்குச் சென்றுள்ளனர். 16-ஆம் தேதி சங்கீதா ஒழலை கிராமத்தில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து நவீன்குமார் அங்கு சென்று பார்த்தபோது, சங்கீதா கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஆற்காடு கிராமிய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
கேவேளூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்கிற புருசோத்தமனை (23) பிடித்து விசாரணை நடத்தியதில், கடந்த 16-ஆம் தேதி சங்கீதா, ரஞ்சித்துக்கு செல்லிடப்பேசியில் தொடர்புகொண்டு, ஒழலையில் உள்ள தனது வீட்டிற்கு வருமாறு கூறினாராம்.
அங்கு சென்ற ரஞ்சித்திடம் சங்கீதா, தான் கர்ப்பமாக இருப்பதாவும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித், சங்கீதாவை செல்லிடப்பேசி
சார்ஜர் வயரால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் ரஞ்சித்தை புதன்கிழமை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








