செல்லியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

வேலூர் பாலாற்றங்கரையிலுள்ள செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
Updated on
1 min read

வேலூர் பாலாற்றங்கரையிலுள்ள செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
 வேலூர்  புதிய பேருந்து நிலையம் அருகே பாலாற்றங்கரையில் அமைந்துள்ள செல்லியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்  நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடத்தப்பட்டன. இப்பணிகள் முடிவடைந்ததை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, கடந்த 1-ஆம் தேதி பூஜைகள் தொடங்கின. முதல் நாள் காலை விக்னேஷ்வர பூஜை, கோ பூஜை,  விநாயகர் பூஜை, லட்சுமி பூஜை, நவக்கிரக பூஜையும், மாலை வாஸ்து சாந்தி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
இரண்டாம் நாள் காலை யாக சாலை நிர்மாணம், தீபாராதனையும், மாலை அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், முதல் கால யாக பூஜை, தீபாராதனை ஆகியவையும்,  மூன்றாம்  நாள்  காலை விசேஷ சாந்தி, 2-ஆம் கால யாக பூஜை, அஷ்டபந்தன சமர்ப்பணம் ஆகியவையும், மாலை 3-ஆம் கால யாக பூஜை, நாடி சந்தானம், தத்துவார்ச்சனை, தீபாராதனை ஆகியவையும் நடைபெற்றன. 
இதன்தொடர்ச்சியாக,  ஞாயிற்றுக்கிழமை காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு யாக சாலையில் வைக்கப்பட்டிருந்த  புனிதநீரை, சிவாச்சாரியார்கள் கலசங்கள் மீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.
 விழாவில் தமிழக  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினர்  ப.கார்த்திகேயன், அறநிலையத்துறை வேலூர் மண்டல இணை ஆணையர் அசோக்குமார், உதவி ஆணையர்  விஜயகுமார் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். 
மாலையில் மூலவருக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. இரவில் வாணவேடிக்கையுடன்  செல்லியம்மன் வீதி உலா நடைபெற்றது. 
 


கீழ்விஷாரம் பச்சையம்மன் கோயிலில்...
ஆற்காட்டை அடுத்த கீழ்விஷாரம் பிள்ளையார் கோயில் தெரு, ஏரிக்கரையில் உள்ள பச்சையம்மன் கோயிலில் திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
 விழாவுக்கு, திருவலம் சாந்தா சுவாமிகள், சித்தஞ்சி மோகனந்த சுவாமி, புதுக்கோட்டை மனோகர சித்தர், முன்னாள் எம்எல்ஏ கே.எல்.இளவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை  சுவாமி கரிக்கோலம், வாஸ்து பூஜை, வாயில்காவலர் பூஜை,  மகா கணபதி பூஜை, யாக சாலை வேள்வி உள்ளிட்டவை நடைபெற்றன. திங்கள்கிழமை காலை இரண்டாம் கால வேள்வி, நாடி சந்தானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர், கோயில் கோபுரம், மூலவர், பரிவார மூர்த்திகள், வாமுனி, செம்முனி ஆகியோருக்கு புனிதநீர் தெளித்து, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
 தொடர்ந்து மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com