அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மிக அவசியம்: ஆட்சியர் எஸ்.ஏ.ராமன்
பொதுமக்களிடையே அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு அவசியம் என்று ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் கூறினார்.


பொதுமக்களிடையே அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு அவசியம் என்று ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் கூறினார்.
அரக்கோணத்தை அடுத்த இலுப்பைதண்டலம், சித்தூர், சயனபுரம் ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கி இலுப்பைதண்டலம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியர் பேசியதாவது:
மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு நலத் திட்டங்கள் உள்ளன. தமிழக அரசு சார்பில் பொதுமக்கள் குறிப்பாக ஏழை மற்றும் கிராம மக்களின் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்கள் உள்ளன. இத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அவ்வபோது தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் மூலமாக தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். தற்போதைய காலங்களில் திட்டம் தொடங்குவது முதல் பொதுமக்களைச் சென்றடைவது வரை அரசு நிர்வாகம் உற்று கவனித்து வருகிறது.
குறிப்பாக, வேலூர் மாவட்டத்தில் கொத்தடிமைகளாக பல இடங்களில் மக்கள் பணி செய்து வந்தனர். தற்போது மாவட்டத்தில் சில இடங்களில் இது இருக்கிறது. இருந்தாலும், மாவட்ட நிர்வாகம் இவர்களை மீட்டு உணவு, உடை, இருப்பிடம் வழங்கி, எதிர்கால வாழ்வுக்கும் உதவிகளை அளித்து வருகிறது. எனவே, அரசின் நலத் திட்டங்களை குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியம்.
இலுப்பை தண்டலத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியின் கட்டடம் மிகவும் பழுது அடைந்திருப்பது தெரியவந்துள்ளது. ரூ. 2 லட்சத்தில் இப்பள்ளி கட்டடம் உடனே பழுது பார்க்கப்படும்.
மேலும், இப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட ரூ. 70 லட்சத்தில் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. உத்தரவு வந்தவுடன் புதிய கட்டடம் கட்டப்படும் என்றார் அவர்.
முன்னதாக அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி பேசுகையில், சயனபுரம் கிராமத்தில் 40 ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா கிடைக்கவில்லை என ஆட்சியரின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். தற்போது, இம்முகாமில் அங்கு குடியிருந்த அனைவருக்கும் பட்டா வழங்கப்பட உள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார். ஆட்சியருக்குப் பாராட்டுகள் என்றார்.
முகாமில், ராணிப்பேட்டை கோட்டாட்சியர் வேணுசேகரன் வரவேற்றார். வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ஏ.ஜி.விஜயன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அலுவலர் ஜெயபிரகாஷ், ஆதிதிராவிட நலத் துறை அலுவலர் கஜேந்திரன், துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்பு) பேபி இந்திரா, நில அளவைத் துறை உதவி இயக்குநர் கண்ணபிரான், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜி.சி.சிங், அரக்கோணம் வட்டாட்சியர் வேணுகோபால், சமூகப் பாதுகாப்புத் துறை தனி வட்டாட்சியர் ஜெயந்தி, குடிமைப் பொருள் வழங்கல் துணை வட்டாட்சியர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முகாமில் 386 மனுக்கள் வரப் பெற்றன. இதில் 252 மனுக்கள் ஏற்கப்பட்டன. 78 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 56 மனுக்கள் பரிசீலனையில் வைக்கப்பட்டன. மொத்தம் 120 பேருக்கு ரூ. 19.97 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மேலும், வேளாண்மைத் துறை, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து துறையினரின் சார்பில் கண்காட்சி நடைபெற்றது.
இளைஞரால் சலசலப்பு
கூட்டத்தில் ஆட்சியர் பேசிக் கொண்டிருந்த போது, அக்கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் பறைமேளம் அடித்தபடி மணல் கடத்தலைத் தடுக்க வேண்டும் என்று சப்தமாக கூறியவாறு கூட்டத்தை நோக்கி வந்தார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. அப்போது தக்கோலம் காவல் உதவி ஆய்வாளர் சிவசங்கரன், அந்த இளைஞரைப் பிடித்து அழைத்துச் செல்ல முயன்றார்.
தொடர்ந்து ஆட்சியர் பேசிய பிறகு, மனு கொடுக்க வந்த கார்த்திக்கை ஆட்சியர் கண்டித்தார். மேலும், கோரிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...