ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே நிழற்கூரை இல்லாததால் கடுமையான வெயில் மற்றும் மழையில் பயணிகள் பேருந்துக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆம்பூர் தோல் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகும். தோல், தோல் பொருள்கள் ஏற்றுமதியில் ஆம்பூர் முக்கிய பங்காற்றுகிறது. ஆம்பூர் நகருக்குள் சென்னைபெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. அனைத்து ஊர்களுக்கும் புறவழிச் சாலை உள்ளது. ஆனால் ஆம்பூருக்கு மட்டும் தேசிய நெடுஞ்சாலையில் புறவழிச்சாலை இல்லை. இதனால் அனைத்து வாகனங்களும் ஆம்பூர் நகருக்குள் தான் வந்து செல்ல முடியும்.
அதேபோல சென்னையிலிருந்து பெங்களூரு வரையில் நடுவில் எந்த ஊரிலும் தேசிய நெடுஞ்சாலையில் சிக்னல் இல்லை. ஆனால் ஆம்பூரில் மட்டுமே தேசிய நெடுஞ்சாலையில் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஆம்பூர் ராஜீவ் காந்தி சிலையருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடக்கும் இடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்தபோது ஆம்பூர் நகருக்கு மேம்பாலம் அமைக்கும் திட்டம் இருந்தது. ஆனால் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் மேம்பாலம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது.
தற்போது தேசிய நெடுஞ்சாலை 6 வழிச் சாலையாகவும், ஆம்பூர் நகருக்கு வெளியே கிராமப்புறங்களில் 6 வழிச்சாலையாகவும் விரிவாக்கம் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
ஆனால் ஆம்பூர் நகருக்குள் விரிவாக்கம் செய்யும் பணி இதுவரை தொடங்கப்படாமல் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. விபத்துகளைத் தவிர்க்க நகரில் மேம்பாலம் அமைக்க வேண்டுமென்று அனைத்து தரப்பு மக்களும் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்துக்கு பலமுறை கோரிக்கை மனுக்களை அனுப்பியுள்ளனர். ஆனால் நகரப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 6 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கப்படாததற்கு காரணம் இதுவரை தெரியவில்லை.
இதனால் தினமும் ஆம்பூர் பகுதியில் பேருந்து நிலையம், ராஜீவ் காந்தி சிலை சந்திப்பு, ரயில் நிலைய சந்திப்பு, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு சந்திப்பு, சான்றோர்குப்பம் பகுதி சந்திப்பு, இந்து மேல்நிலைப் பள்ளி எதிரில் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்கின்றனர். அத்தகைய நேரங்களில் அடிக்கடி விபத்துகள் நடந்து உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நகரில் 6 வழிச்சாலை விரிவாக்கப் பணியை விரைந்து தொடங்க வேண்டும். அதேநேரத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்க்கின்றனர்.
ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுவதற்கு முன் அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்துக்குள் வந்து சென்றன. தேசிய நெடுஞ்சாலையின் நடுவே தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டதால் வேலூரிலிருந்து வாணியம்பாடி மார்க்கத்தில் சேலம், கிருஷ்ணகிரி, ஒசூர், பெங்களூரு செல்லும் பேருந்துகளும், திருப்பத்தூர், தருமபுரி செல்லும் பேருந்துகளும் ஆம்பூர் பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்ல முடிவதில்லை. இதனால் ஆம்பூர் பேருந்து நிலையத்துக்கு எதிரில் தேசிய நெடுஞ்சாலையிலேயே நின்று பயணிகளை இறக்கிவிட்டும், ஏற்றிக் கொண்டும் செல்கின்றன. பயணிகள் பேருந்து நிலையத்தில் காத்திருப்பதற்கு பதிலாக தேசிய நெடுஞ்சாலையிலேயே பேருந்துகளுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், கடுமையான வெயிலிலும், மழையிலும் பயணிகள் அவதிக்கு உள்ளாகின்றனர். இதுகுறித்தும் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்துக்கு பலமுறை பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பயணிகள் காத்திருப்பதற்கான எவ்வித வசதியும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்படுத்தி தரவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.
சென்னையில் சில பகுதிகளில் பேருந்து நிறுத்தத்தில் சாலையிலேயே உயர்ந்த நிழல்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே போல ஆம்பூரிலும் தேசிய நெடுஞ்சாலையில் உயர்ந்த நிழல் கூரையை அமைத்து பயணிகளின் நலனைப் பாதுகாக்க வேண்டுமென ஆம்பூர் பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.