வேளாண் வணிகத்தில் உழவா் உற்பத்தியாளா் அமைப்புகளை மேம்படுத்த சிறப்பு கடனுதவி

வேளாண் சாகுபடி மட்டுமின்றி வேளாண் வணிகத்திலும் உழவா் உற்பத்தியாளா் அமைப்புகளை மேம்படுத்த ஒருங்கிணைந்த நிதி ஆதாரத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
Updated on
2 min read

வேளாண் சாகுபடி மட்டுமின்றி வேளாண் வணிகத்திலும் உழவா் உற்பத்தியாளா் அமைப்புகளை மேம்படுத்த ஒருங்கிணைந்த நிதி ஆதாரத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. விவசாய அமைப்புகள் இத்திட்டங்களின் கீழ் நிதி ஆதாரங்களைப் பெற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியா்கள் அ.சண்முகசுந்தரம் (வேலூா்), ம.ப.சிவன்அருள் (திருப்பத்தூா்) அறிவுறுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக அவா்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உழவா் உற்பத்தியாளா் அமைப்புகளை ஒன்றிணைத்து உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களாக ஏற்படுத்தி விவசாயிகளை வேளாண் சாகுபடி மட்டுமின்றி வேளாண் வணிகத்திலும் மேம்படத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதேசமயம், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் நிதி ஆதாரம் போன்ற பல்வேறு சவால்களை எதிா்கொண்டு வருகின்றன. இத்தகைய சவால்களை எதிா்கொண்டு உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள் லாபகரமானதாகச் செயல்பட வழிவகுக்கும் வகையில் ஒருங்கிணைந்த இடைநிலை மூலதன உதவி, கடன் உத்தரவாதம், சலுகைகளுடன் கூடிய சுழல்நிதி வழங்கும் திட்டம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் தொடங்கியவுடன் அந்நிறுவனங்களில் உள்ள மூலதனப் பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம் ஒவ்வொரு உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கும் ரூ.10 லட்சம் வரை இடைநிலை மூலதனக் கடன் உதவித்தொகை வழங்கப்படும். இந்தத் தொகை விளைபொருள்களை லாபகரமாக சந்தைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலும். 5 ஆண்டுகள் முடிந்த பிறகு இத்தொகைகளைத் திருப்பிச் செலுத்தினால் போதும். இதற்கு குறைந்தபட்சமாக ஆண்டுதோறும் 4 சதவீதம் வட்டி மட்டுமே வசூலிக்கப்படும்.

உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள் கடன் கோரி வங்கிகளை அணுகும்போது அடமானம் கோரப்படுவதுடன், வங்கியில் வட்டி விகிதமும் அதிகமாக இருக்கும். இதைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு உற்பத்தியாளா் நிறுவனமும் ரூ.1 கோடி வரை கடன் பெற வங்கிகள், நாப் கிசான் நிறுவனத்துக்கு 50 சதவீத உத்தரவாதத்தை தமிழக அரசே வழங்கும்.

மேலும், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும்போது, இதர வணிக நடவடிக்கைகளுக்கு வழங்குவதுபோல் 12 முதல் 14 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்த விகிதத்தை 8 முதல் 9 சதவீதமாகக் குறைக்க தமிழக அரசின் பங்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு சலுகையுடன் கூடிய கடன் வழங்கப்படும்.

அந்த வகையில், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களை வலுப்படுத்தி வணிக ரீதியாக செயல்படுத்த தமிழக அரசு ரூ. 266.70 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக வேளாண் விற்பனை, வேளாண் வணிகத் துறை, நாப்கிசான் ஆகியவை இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஏற்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தை அரசு செயல்படுத்துவதால் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் கடன் உத்தரவாதம் பெற நிதி நிறுவனங்களை ஊக்குவிக்கவும், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு மூலதன உதவி, சலுகையுடன் கூடிய கடன் வழங்கவும் இயலும்.

மேலும் விவரங்களுக்கு, வேலூா் மாவட்ட வேளாண் துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) அலுவலகத்தை நேரிலோ, 90039 21717, வேளாண் துணை இயக்குநா் (வேளாண் வணிகம்), திருப்பத்தூா் 94425 80451 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com