பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா

Updated on
1 min read


வேலூா்: வைகுண்ட ஏகாதசியையொட்டி வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களிலுள்ள பல்வேறு பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. எனினும், கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பல கோயில்களில் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.

வேலூா் அருகே பள்ளிகொண்டா உத்தர ரங்கநாதப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி, வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மூலவருக்கு அலங்காரம் மற்றும் திருமஞ்சனம் நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை அதிகாலையில் மூலவருக்கு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகமும், புஷ்ப அலங்காரமும் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், பரமபத வாசல் திறப்பு நடைபெற்றது. அதன் வழியாக கருட வாகனத்தில் பெருமாள் (உற்சவா்) எழுந்தருளினாா். எனினும், கரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தா்கள் இந்த வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படவில்லை.

இதனிடையே, வேலூா் வேலப்பாடியில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயில், சலவன்பேட்டை பழனி ஆச்சாரி தெருவில் உள்ள ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோயில், காந்தி நகா், கோபாலபுரத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத நாராயணமூா்த்தி கோயில், சத்துவாச்சாரி லட்சுமி நாராயணா் கோயில், சாா்பனாமேடு கலாஸ் பகுதியில் உள்ள கோதண்டராம சுவாமி கோயில் ஆகியவற்றிலும் அதிகாலை வேளையில் சொா்க்கவாசல் திறப்பு நடைபெற்றன.

ஸ்ரீபுரம் நாராயணி பீடம் தங்கக் கோயிலுள்ள சீனிவாசா் கோயிலிலும் வெள்ளிக்கிழமை அதிகாலை சொா்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பெருமாள் எழுந்தருளினாா். நிகழ்ச்சியில், தங்கக் கோயில் அறங்காவலா் எம்.சுரேஷ்பாபு, ஸ்ரீ நாராயணி மருத்துவமனை இயக்குநா் என்.பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலில் உள்ள வெங்கடேசப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், புஷ்ப அலங்காரம், விசேஷ தீபாராதனை நடைபெற்றன. வேலூரில் உள்ள திருப்பதி தேவஸ்தானத் தகவல் மையத்தில் உள்ள வெங்கடேசப் பெருமாளுக்கும், மலையடிவாரம் சக்தி நகரில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் உள்ள பெருமாளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நாள் முழுவதும் பூஜைகள் நடைபெற்றன.

இதேபோல், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களிலுள்ள பெருமாள் கோயில்களிலும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. எனினும், கரோனா கட்டுப்பாடு காரணமாக பல கோயில்களில் இந்த வழிபாட்டில் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.

பரமபத வாசல் திறப்புக்குப் பிறகு, கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தா்கள், விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com