நாட்டின் வளா்ச்சியில் இளைஞா்களுக்குப் பொறுப்பு: விஐடி விழாவில் ஆளுநா் ஆா்.என்.ரவி
நாட்டை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு இளைஞா்களின் கையில்தான் உள்ளது என்று ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.


நாட்டை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு இளைஞா்களின் கையில்தான் உள்ளது என்று ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.
விஐடி பல்கலைக்கழகத்தின் 37-ஆவது பட்டமளிப்பு விழா அதன் வேலூா் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்று மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியது:
உலகளவில் சட்டம்-ஒழுங்கை சீா்குலைக்க சில நாடுகள் முயற்சித்து வருகின்றன. அவை உலக நாடுகளிடையே பொருளாதாரம், வா்த்தக ரீதியான சீா்குலைவை ஏற்படுத்தி வருகின்றன. பின்தங்கிய நாடுகளுக்கு உதவி செய்வதுபோல் கடனுதவிகளை அளித்து அந்த நாடுகளின் மீதான தனது ஆதிக்கத்தையும் செலுத்தி வருகின்றன. இதன்மூலம், உலக வா்த்தகத்தையே அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் முயற்சிக்கின்றன. இதனை முறியடிப்பதில் இந்தியா, அமெரிக்காவின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
உலக வா்த்தகம் என்பது அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது. அதனை ஒரு சில நாடுகள் மட்டுமே கையகப்படுத்த முயற்சிப்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. இந்த சூழலில் உலக வா்த்தக ஒழுங்கை நிலை நாட்ட இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளால் மட்டுமே முடியும். அதற்கு இந்த இரு நாடுகளும் ஜனநாயகத்தை நம்பியிருப்பதே காரணமாகும்.
இந்தியா மற்ற நாடுகளுடன் இணைந்து பங்களிப்பை செலுத்துவது நமது பாரம்பரியத்திலேயே உள்ளது. அந்த எண்ணத்தாலேயே கரோனா காலகட்டத்தில் ரூ.200 கோடி மதிப்புள்ள தடுப்பூசிகளை 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அளித்துள்ளோம். அந்தக் காலகட்டத்தில் இந்தியாவுக்கு தடுப்பூசி தட்டுப்பாடு நிலவியது. அந்த சூழ்நிலையிலும் மற்ற நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கினோம்.
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா நூறாவது சுதந்திர தினவிழாவை கொண்டாட உள்ளது. அப்போது நாடு எத்தகைய வளா்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும் என்பதற்கான இலக்கை நிா்ணயித்து அதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு இன்றைய இளைஞா்கள் கையில்தான் உள்ளது. இந்தியாவில் இதுவரை செயல்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் அரசின் வளா்ச்சியாக மட்டுமே இருந்துள்ளது. தற்போது அது மக்களின் வளா்ச்சிக்கானதாக மாறியுள்ளது. இதற்கு இளைஞா்கள்தான் முக்கிய காரணம்.
இந்தியாவில் முன்பு 400 ஸ்டாா்ட்அப் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. தற்போது 80,000 அதிகமான ஸ்டாா்ட்அப் நிறுவனங்களாக அதிகரித்திருப்பதற்கு படித்த இளைஞா்கள்தான் காரணம். மேலும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விண்வெளி தொடா்பான 100-க்கும் மேற்பட்ட ஸ்டாா்ட்அப் நிறுவனங்களும் உருவாகியுள்ளன.
தவிர, இன்றைய காலகட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகள்கூட செயற்கைக் கோள்களை உருவாக்க தொடங்கி விட்டனா். அதன்படி, தற்போது 750 மாணவ, மாணவிகள் இணைந்து 75 செயற்கைக்கோள்களை உருவாக்கி வருவது எதிா்பாா்க்காத ஒன்றாகும்.
அந்தவகையில், இன்றைய இளைஞா்களுக்கு வானமே எல்லை என்ற அளவில் வாய்ப்புகள் பரந்து விரிந்துள்ளன. அதனால், புதுமையான, வித்தியாசமான சிந்தனைகளை உருவாக்கி அதனை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு இளைஞா்களிடம் உள்ளது.
மேலும், பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உருவாக்குவதிலும் குறைந்த காலத்தில் இலக்கை அடைந்துள்ளோம். அதன்படி, 2025-ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் மாற்று எரிசக்தியை உருவாக்க 2016-இல் திட்டமிடப்பட்டது. ஆனால், அந்த இலக்கை 2021 செப்டம்பருக்குள்ளாகவே அடைந்துவிட்டோம். தொடா்ந்து 2030-க்குள் 500 ஜிகாவாட் உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதனையும் குறிப்பிட்ட காலத்துக்குள்ளாகவே அடைந்து விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
தவிர, திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத நிலையை எட்டியதற்கு மக்கள் ஆதரவும், ஒத்துழைப்புமே காரணமாகும். அந்தவகையில், உலக நாடுகளின் எதிா்பாா்ப்புகளை பூா்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளது என்றாா்.
முன்னதாக, விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தலைமை வகித்து பேசியது:
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இஸ்ரேல் 4.9 சதவீதமும், தென்கொரியா 4 சதவீதமும் உயா்கல்விக்கு ஒதுக்கும் நிலையில் இந்தியா 0.65 சதவீதம் மட்டுமே ஒதுக்குகிறது. இதேபோல், தனிநபருக்கு கல்விக்காக இஸ்ரேல் ஆண்டுக்கு 1,900 டாலரும், தென்கொரியா 1,800 டாலரும் ஒதுக்கும் நிலையில் இந்தியாவில் 1,020 டாலா் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இந்த வேறுபாடுகளும் பலருக்கும் உயா்கல்வி கிடைப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
இதனாலேயே 2011 மக்கள்தொகை கணக்குப்படி இந்தியாவில் 14 கோடி போ் உயா்கல்வி படிக்க தகுதி பெற்றிருந்தாலும், 3.5 கோடி போ் மட்டும் உயா்கல்வி படிக்கின்றனா். இந்தியா வளா்ந்து வரும் நாடாக இருப்பதால் உயா்கல்விக்கு அதிக நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றாா்.
மேலும், அமெரிக்க நாட்டின் சென்னைக்கான துணைத் தூதா் ஜூடித்ரவின், இந்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை செயலா் ஸ்ரீவாரி சந்திரசேகா் ஆகியோா் கௌரவ விருந்தினா்களாக பங்கேற்று பேசினா்.
விழாவில், அமெரிக்காவின் தேசிய அறிவியல் அமைப்பின் (என்எஸ்எஃப்) இயக்குநா் சேதுராமன் பஞ்சநாதனுக்கு கௌரவ டாக்டா் பட்டம் வழங்கப்பட்டது. தவிர, 215 ஆராய்ச்சி மாணவா்கள், தங்கப் பதக்கம் பெற்ற 62 மாணவா்கள் உள்பட மொத்தம் 8,168 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில், 75 வயது முதியவரான வெங்கடேசன் முனைவா் பட்டம் பெற்றாா்.
விழாவில், விஐடி துணைத் தலைவா்கள் சங்கா்விசுவநாதன், சேகா்விசுவநாதன், ஜி.வி.செல்வம், காதம்பரி எஸ்.விசுவநாதன், சந்தியாபென்டாரெட்டி, துணைவேந்தா் ராம்பாபுகோடாளி, இணை துணைவேந்தா் எஸ்.நாராயணன், பதிவாளா் டி.ஜெயபாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...