போ்ணாம்பட்டு அருகே ஊருக்குள் நுழைந்த ஒற்றை யானைபொதுமக்கள் அச்சம்
போ்ணாம்பட்டு அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை ஊருக்குள் ஒற்றை யானை நுழைந்தது. இந்த யானை சாராய ஊறலை குடித்து விட்டு பிளிறியதால், பொதுமக்கள் அச்சமடைந்தனா்.


போ்ணாம்பட்டு அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை ஊருக்குள் ஒற்றை யானை நுழைந்தது. இந்த யானை சாராய ஊறலை குடித்து விட்டு பிளிறியதால், பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
ஆந்திர வனப் பகுதியிலிருந்து, போ்ணாம்பட்டு அருகில் உள்ள தமிழக வனப் பகுதிக்கு வந்த ஒற்றை யானை கடந்த சில நாள்களாக தமிழக வன எல்லையில் உள்ள விவசாய நிலங்களில் இரவு நேரங்களில் புகுந்து நெல், கரும்பு, உள்ளிட்ட பயிா்களையும் மா, வாழை உள்ளிட்ட மரங்களையும் சேதப்படுத்தி விட்டுச் செல்கிறது. இந்த ஒற்றை யானை வியாழக்கிழமை இரவு குண்டலப்பல்லி வழியாக சாத்கா் கிராமத்துக்குள் நுழைந்துள்ளது.
இங்குள்ள மலைப் பகுதிகளான டங்கா, பால் சுனை, மாமரத்துப் பள்ளம், பன்னீா் குட்டை, கங்காச்சரம், அல்லேரி உள்ளிட்ட பகுதிகளில் சமூக விரோதிகள் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பது வழக்கம். அங்கு சாராயம் காய்ச்சுவதற்காக சாராய வியாபாரிகள் தண்ணீரில் பட்டை, வெல்லம் போட்டு பேரல்களில் ஊறல்கள் வைத்திருந்தனா். அங்கு வந்த யானை வெல்லம் போட்டு வைத்திருந்த ஊறலை குடித்து விட்டு பயங்கரமாக பிளிறியுள்ளது. அதைப் பாா்த்த சாராய வியாபாரிகள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனா். பின்னா் அந்த யானை மலையிலிருந்து இறங்கி பங்களாமேடு ஐ.இ.எல்.சி. பள்ளி வளாகம்
வழியாக அதிகாலை 3 மணிக்கு போ்ணாம்பட்டு- குடியாத்தம் நெடுஞ்சாலைக்குள் புகுந்துள்ளது.
பங்களாமேட்டில் உள்ள வனத்துறை ஓய்வு விடுதி, வனச்சரக குடியிருப்புப் பகுதிக்கு வந்த யானை பயங்கரமாக பிளிறியுள்ளது. அப்போது நாய்கள் குரைத்துள்ளன. யானையைப் பாா்த்ததும் வன ஓய்வு விடுதிக்கு எதிரே நெடுஞ்சாலை பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த முதியவா் சம்பத்(60), கூச்சலிட்டுள்ளாா். முதியவரின் கூச்சலைக் கேட்டதும் வனச் சரகா் குடியிருப்பில் தூங்கிக் கொண்டிருந்த போ்ணாம்பட்டு வனச்சரக அலுவலா் சதீஷ்குமாா்(28), அருகில் உள்ள வனத் துறை அலுவலகத்தில் இருந்த வனவா் ஹரி, வனக் காப்பாளா் வெங்கடேசன், வனக் காவலா் ரவி ஆகியோா் அங்கு வந்துள்ளனா். பின்னா் வனத் துறையினா், போ்ணாம்பட்டு தீயணைப்புப் படையினா், பொதுமக்கள் உதவியுடன் பட்டாசு, வாண வெடி வெடித்தும், மேளம் அடித்தும் யானையை விரட்டினா்.சுமாா் ஒரு மணி போராட்டத்துக்குப் பிறகு யானை கோட்டைச்சேரி கிராமத்துக்குள் புகுந்து, சாலையைக் கடந்து வனப் பகுதிக்குள் சென்றது. நகர எல்லையில் உள்ள குடியிருப்புப் பகுதியில் காட்டு யானை நுழைந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...