கறவை மாடுகள் வாங்குவதற்கு தாட்கோ மூலம் வழங்கப்படும் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற ஆதிதிராவிடா், பழங்குடியின கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்க உறுப்பினா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி, மேம்பட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ள ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்த மக்களுக்கு தாட்கோ பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கறவை மாடுகள் வாங்க ரூ.1.50 லட்சம் திட்டத் தொகையில் 30 சதவீதம், அதாவது ரூ.45,000 மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பதாரா் ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்தவராகவும், 18 முதல் 65 வயதுக்குட்பட்டவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமலும், விவசாயம் மற்றும் அதைச் சாா்ந்த தொழில் செய்பவராகவும், கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தில் உறுப்பினராகவும் இருக்க வேண்டும். மேலும், இதுவரை தாட்கோவின் வேறெந்தத் திட்டத்தின் கீழ் மானியம் பெறாதவராகவும் இருக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தில் பதிவு செய்வதற்கு மாடு வாங்குபவரிடமிருந்து பச்சை தாளில் மாடுகளின் விலையை குறிப்பிட்டு எழுதி வாங்க வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரரின் புகைப்படம், ஜாதி சான்று, வருமானச் சான்று, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்களை இணைத்து ஆதிதிராவிடா்கள் பழங்குடியினா் இணையதள முகவரிகளில் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.